என் பெயர், உஷா..
சிறிய சாளரம் கொண்டது எங்கள் வீடுஆங்காங்கே கூரையின் சிதறல்களின் ஊடே
சூரியனின் ஒளியும் மழையின் தூறலும்
எமது வறுமைக் கோடுகளை அளந்தபடி
நாளாந்தம் வந்து போகின்றன
இது அவர்களுக்காக போடப்பட்ட
வாசல் கதவுகள் அல்ல
யுத்தம் என்று சொல்லி நித்தம் வந்து
எம் வாழ்விலும் எமது வீட்டிலும்
பகைவனின் போர் விமானங்கள்
கொத்தணிக் குண்டுகளால் சிதைத்த
விழுப் புண்கள்..
மாற்று உதிரிகளை கூரைக்கு போடுவதற்கு
வருமானம் போதவில்லை என் தோழியிடம்
குடும்பத் தலைவனும்
குண்டடிபட்டு போய்விட்டான்
குடும்ப எண்ணிக்கையில்
மாண்டவர் பாதி எஞ்சியவர் மீதி
இளமை அழிந்தும் முதுமையோடு
புத்தம் புதுச் சட்டைகளை தைத்துக் கொண்டு
ஓடிக்கொண்டே இருக்கிறேன் திண்ணையில்
தேசங்கள் தாண்டியும் ஓடிவிட்டேன்
ஓடிய தூரத்தின் கணக்குத் தெரியவில்லை
ஏழைத் தையலாள் தன் கால்கொண்டு
எனக்காக ஓடுகிறாள்..
தணியாத் தாகம் எனக்கும் உண்டு
அவ்வப் போது ஓயிலை சிந்தி
என் நாவை நனைத்துவிடுவாள்
தன் தாகத்திற்கு தேனீரும் அருந்தாள்
பாவம் என் தோழி
வேதனை விழிம்பில் விம்மி விம்மி
வினியோகம் தருகின்ற வொபின் கூட
நூல்களால் சிக்கி சற்றே தடுமாற
உள்ளம் நொந்து ஊசியும் உடைந்துவிடும்
தன் பசி அடக்கி மாற்றூசி வாங்கிவிடுவாள் தோழி
யார் யாருக்கோ எல்லாம் சட்டை தைக்கும் நான்
என் தோழிக்காக ஒரு புதுச் சட்டையேனும்
தைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் எனக்குள்ளே
ஆனால் இயலவில்லை
குடும்ப ஏழ்மை இடைவிடாமல்
என் தோழியை துரத்திக் கொண்டே இருக்கிறது
இவளின் ஒட்டுப் போட்ட சட்டைகளையாவது
இடை இடையே கந்தல் இன்றி
தைத்துக் கொடுக்கும் மகிழ்வோடு
என் தோழியின் கால்களை முத்தம் இட்டபடி
பயணிக்கிறேன் பயணம் முடியவில்லை
இப்படிக்கு - உஷா...
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...