vendredi 30 juin 2017

பீனிக்ச் பறவையே உன் பள்ளி வருகிறேன்....

மலரென நினைத்தேன் அணிகலன் செய்தேன் - என்
மனசை கொன்றே போனதேன் மணிப் புறா
காலச் சூழல் கொய்த தென்று
வேடம் தாங்கல் சென்றதில்லை
கூடு கட்டி வாழ்ந்த மனசை
கொத்திப் போனதேன் வந்த புறா           

பீனிக்ச் பறவையே உன் பள்ளி வருகிறேன்
பால் வேறு நீர் வேறாய் பாகம் பிரித்து
நானும் பழகி பார்த்திட
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போகுமே
கலங்காது வானம் கண்ணீர் இல்லா கோலமே
ஆறாக் காயம் எத்தனை நாள்
ஆறும் அது ஆறே நாள்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கல் வேதனை வாழ்வே

பாவலர் வல்வை சுயேன்

jeudi 22 juin 2017

எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!

நிழல் தரு உயர் நிலை நீள நினைந்தேன்
ஏந்திழை ஏதறிவேன் உதிர் வெனும் இறப்பில்
காவலின் இமைகளும் இழந்தேன்
தனிமை கொடிதினும் கொடிதே
கொன்றே தின்றது என்னை            
இதய நரம்புகளையே (சு)வாசித்தேன்
துளிர்த்தன துளிர்கள் துணைக் கரம் வீசி
பூக்களின் வாசம் பூமிக்கும் தெளித்தேன்

கூவும் குயில்களே பாடும் கிளிகளே
கூடி வாருங்கள் குடியிருக்க   
இலையுதிர் காலம் திரும்பும் முன்னே
வசந்த காலம் வா வா எங்கிறது
நல்லார் இங்குளார் எனில்
எல்லோர்க்கும் பெய்யும் மழை

பாவலர் வல்வை சுயேன்

mercredi 21 juin 2017

இது ஏனோ புரியலையே....

மானிடர் இறந்தால் மரண வீடு
கால் நடையொடு மீன்களும் இறந்தால்
மானிடர் வீட்டில் மாமிச உணவு
இது ஏனோ
புரியலையே....

பாவலர் வல்வை சுயேன்

mardi 20 juin 2017

நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே !!!

துள்ளித் துள்ளி நிதம் தாவி வரும் வெள்ளி அலையே
உன் புன்னகை பூச் சொரிவில் கனிவுறு மனம் கண்டேன்
ஊருக்குள் உத்தமரை நிதம் தேடி நீ வருகிறாய்
நூல் வேலி தாண்டித் தாண்டி
நுகர் கொம்பு ஊன்றி ஊன்றி
நகம் பதிக்கும் கூட்டம் தானே இங்கே இங்கே

தவம் இருந்த நாட்கள் எண்ணி தாண்டும் நிலை தாண்டிவிட்டால்
ஆணோ பெண்ணோ தொடாத பாகங்கள் ஏதும் இல்லை
தொட்டணைத்தே வாழுகிறார் தொட்டும் குறை விட்டதில்லை
பகலிலே அருந்ததி நோக்கும் பெருந்தகையே எல்லோரும்
பொய் முகங்கள் போடும் கோலம் கை விலங்கும் காணாத் தூரம்
பூகம்பச் சாரல் வீழ்ந்து புறையோடி போன பின்னும்
நீ அள்ளி வருகிறாய் வெள்ளி அலை
இங்கு நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே.....

பாவலர் வல்வை சுயேன்

samedi 17 juin 2017

முற்றத்து வேம்பு......


என் முற்றத்து வேம்பே - எங்கள்
சுற்றத்தின் ஆத்மீக சுயம்பு நீ
உன்னில் பேயாடுது முனி ஆடுது
என்பார்கள்....

சிவன் இராத்திரி முளிப்பிற்கு
உன் கிளையில்
நாம் ஆடும் ஊஞ்சலே நியமானது
நாம் ஆட நீ ஆட எம் பாட்டுக்கு
எசைப் பாட்டு குயிலும் பாட
எந் நாளும் ஆனந்தமே

அன்பே உருவான அழகு வேம்பே
பகை அறா காக்கையும் குயிலும்
உன் கூட்டில் தானே
ஒற்றுமை பேணும்
உன் பூ வாசம் போதும்
எங்கள் நோய் எல்லாம் தீரும்
உன் காய் எண்ணை போதும்
வயிற்றுப் பூச்சியும் வலியும்
வற்றியே தீரும்

வம்பு பேசி வேலிச் சண்டை போடும்
அயல் வீட்டாரும்
வம்பளப்பதில்லை உன்னோடு
நீ விரித்திருக்கும்
பெருங் குடை நிழல் நின்றே
ஆனந்தம் கொள்வார்

முற்றத்து மரமாக நான் இல்லை
வேலி தாண்டி நிற்கிறேன்
ஊரும் இல்லை உறவும் இல்லை
நோயில் பாயில் வீழும் வேளை
உறவென்று சொல்ல நீயும் இல்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 16 juin 2017

விழிக்குத் திரை ஏன் போடுகிறாய் !!!


இதயமே இதயமே உருக்கி வார்க்கிறாய் உயிரை நீ
உருகும் உயிர் பாவமடி மெழுகாய் கரைந்தே தீருதடி
அழகுத் தீபம் போலாடி இளமைத் தூரிகை ஏற்றுகிறாய்
விழிக்கும் மொழிக்கும் நீ தூரம் தூரம்
விரல்கள் எழுதும்
உன் அங்கம் எங்கும் ஆனந்த ராகம்
விழிக்குத் திரை போடாதே
உன் சேலை நூலே நான்தானே

நான்கு விழிகளும் நடம் ஆடி
பறிப்போம் வா
மேனிப் பூக்களை இதழ் களாலே
சுகந்த மலர்கள் சுகமே சுகமே
சூடிக் கொடு அங்கம் எங்கும் சூட்டுகிறேன்
மன்மத மன்றின் காம சாஷ்திரங்களை...

பாவலர் வல்வை சுயேன்

lundi 12 juin 2017

இறப்புக்கு பின்னால் ஏதும் இல்லை...

வாழும் போதே நன்றே வாழ்ந்திடு   
நாளை இங்கே யார்தான் இருப்பார்
யாருக்கும் தெரியாதே....

இறப்புக்குப் பின்னால் ஏதும் இல்லை
இருக்கும் நீதான் அறிவாயே....

வறுமையும் வாழ்வும் சிறுமையும் பெருமையும்
வந்தே போகும் விதி எனச் சொல்வாரே
வென்றால் தானே வெள்ளிக் கிண்ணம்
சாதனை தானே வேதனை போக்கும்
உணர்ந்தே வென்றுடு நாளையும் உனதாகும்

நீதியும் நேர்மையும் நெறி கெட்டே வீழ்த்தும்
நதியென நீயும் வளைந்தே ஓடு
வாழ்வின் லெட்சியம் இதுதானே
நாளைய தலைவன் நீயும் ஆகலாம்
உன் குடை நிழல் வாழ ஊரே கூடும்
உயிரே அறிவாயே உன்னை நான் அறிவேனே

பாவலர் வல்வை சுயேன்

vendredi 9 juin 2017

நின்னடி சரண் புகுந்தேன் தேவி....

நல்லார் இங்கெனில் பொல்லார் எவரோ தேவி
கண் விழி ஓடையில் கனலுற்றுக் கரைந்த துளி
உதட்டின் மேல் உப்புக் கரிக்கிதே
கல்லடி வீழ்ந்து செங்குருதி தோய்ந்தும் கலங்கா திருந்தேன்
வஞ்சகர் நாவின் சொல்லடி சுட்டே சுருங்கிப் போனேன்
சொல்லடி தாயே என்னை படைத்திட்ட தேவி
என்ன பிழை செய்தேன் ஏதும் அறிகிலேன்
அன்புக் கரம் கோர்த்தே துன்ப நிலை செய்தாரடி
புன்னகை பூக்கும் பூ நாகக் கண்களாலே
விசம் தீன்டி வீழ்ந்துவிட்டேன்
விருந்தும் மருந்துமாய் உன்னையே உட் கொண்டேன்
வஞ்கர் வாழ்வழித்து வெஞ்சினம் தணித்துவிடு
நின்னடி சரண் புகுந்தேன் தேவி
நிழல்லடி தாருவாய் நீயே

பாவலர் வல்வை சுயேன்

jeudi 8 juin 2017

அழகி நீயடி...

அழகிய பூமியில் ஏதெல்லாம் இன்பமோ
அதெல்லாம் காண்கின்றேன் தோழா
உன் தோள் சாய்ந்து !

உன் தோள் கொடு போதும்
வாழ் நாளெல்லாம் வாழ்கிறேன்
நீ பாதி நான் பாதியென அன்போடு

உச்சி மலை சாரல் வந்து
உன் சேதி சொன்னதடி
உண்மைதான் அழகி நீயடி

உருகாத மனமும் உன்னை கண்டு உருகும் போதில்
பயம் கொள்ளுதடி என் மனம் உன்னிடத்தில்
கிராமியக் குயிலே நீ பாடும் பூபாளம் கேட்க
எந் நாளும் வருவேன் நான் உன் வாசலுக்கே
ஆதவனும் உன் முகம் காணும் முன்னே

பாவலர் வல்வை சுயேன்

lundi 5 juin 2017

என் செய்வேன் நான்....

பல முறை கேட்டுவிட்டாய்
கடனாக என் இதயத்தை
அதை,
ஒரு முறை கொடுத்துவிட்டேன்
இனாமாக உன்னிடத்தில்
இனி இல்லை
இன்னும் கொடுப்பதற்கு
என் செய்வேன் நான்..


பாவலர் வல்வை சுயேன்

vendredi 2 juin 2017

கவிக் கோவிற்கு கவிதாஞ்சலி ....

சோலைக் குயிலே கவினுறு காந்தக் கருவே
நீ கூடு விட்டு கூடல் நீங்கி பறந்த தேனோ
குஞ்சென்றும் தாயென்றும்
கிளை வாழ்ந்த குயில் களெல்லாம்
பாட்டுளந்து முகாரி பாடுதிங்கே
புல் நுணிப் பூவும் புலவா நின் கவி இன்றி புலம்புதிங்கே
கடுகு,க்குள்ளும் கவி புதைத்த வித்தகனே
வெள்ளி முடி தலைக்கணிந்து விருப்போடு போகிறாய்
உன் பிரிவாலே ஒளி கூட இருள் கொட்டி சாய்கிறதே
இருளாட்சி மாடம் உன்னை உள் வாங்கி தின்றாலும்
கவி நூல் களஞ்சியத்தில் உயிரே நீ உயிரானாய்
கவி மாலை சூடி சூட்டிட தந்த கவிக் கோவே
காலங்கள் நூறு கடந்தாலும்
காணா இன்பம் கனிந்து தந்தாய் கவி
உனக்கென்றும் பதினாறே ..

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...