samedi 28 juin 2014

கோல விழிகளை விஷம் கொண்ட விழிகள் ..


கோல விழிகளை விஷம் கொண்ட விழிகள்
வீழ்த்தும் என்றால், எடு நீயே ..
உனக்கும் ஓர் ஆரத்தி
அது சுடு தீபம் அல்லாமல்
சுடு குழலாய் இருக்கட்டும்
உன் இன்பக் கனவுகளை தனதாக்கி
மலரும் நாளை பெண்ணின விடிவு ..

vendredi 27 juin 2014

நேத்துவரை என் நெஞ்சுக்குள்ளே ..


நேத்துவரை என் நெஞ்சுக்குள்ளே
நான் வரைந்த ஓவியமே ..
ஊருக்குள்ளே ஒரு மரம் நான்
தோப்புக் குயில் இல்லையடி ..
கார்காலத் தூரிகை நீ 
கானல்த் துளி வீழும் முன்னே
கை சேராயோ என் கவிக்குயிலே..

jeudi 26 juin 2014

வாங்கித் தந்தாய் சேலை வண்ணம் பார்த்து ..


வாங்கித் தந்தாய் சேலை வண்ணம் பார்த்து
ஆவாரம் பூவும் செந்தூரப் பொட்டும் - என்
பொன்னெழில் கண்டு முத்தம் இடுகின்றன..
செவ்வாழைத் தோப்பும் செவ்விளநீரும்
வரவேற்பு வாசல் நின்று, வா.. வா.. என்றழைத்தாலும்
நீ தந்த சேலை உன்னைக் கண்டே குதூகலிக்கிறது.!
நான் கட்டிவைத்த சேலைக்கு விடுதலை தருவது நீதானே...

lundi 23 juin 2014

சோதனை பாடம் இலகானது அன்று ..


சோதனை பாடம் இலகானது அன்று
இடையில் நீ தந்த விட்டுகளால்...
பள்ளியறை பாடம் பெயிலானது இன்று
என்றோ நீ படித்ததை, விட்டாய் தந்ததால்
மன்னித்துவிடு என்னை ...
உன் இடை காண கண் கூசுகிறது.. !

samedi 21 juin 2014

நீ சிரித்தால் சிதறும் முத்துக்களை ...


நீ சிரித்தால் சிதறும் முத்துக்களை கோர்க்க
புன்னகை காட்டில்  சிறகு விரித்திடும்
என் மனசு ..
என் உலகம் நீதானே என் செல்லமே
நீ அழுதால் தாங்குமோ .. .. ..
முப்புறம் தேடுகிறேன்..
உன்னை அடித்தவர் யார்.?
அழுவதை நிறுத்தி சுட்டுவிரல் காட்டு
முக்கண் பரமானாகிறேன் ...

நிறங்களின் நியக் காதலி உன் விழிகள் ..


நிறங்களின் நியக் காதலி உன் விழிகள்
உணர்வலை படகில் தள்ளாடுவதேன்
உன் மனம் .. .. ..
பருவகாலக் கடலில் கரை தேடி
கரையும் காகிதப் பூ,வல்ல நீ
 
பௌர்ணமி நிலாவே
தேய் பிறைகாலம்
தொலைவில் இல்லை
உனக்கு நீயே ஏணி...

vendredi 20 juin 2014

ஜூன் 20, இன்று உலக அகதிகள் தினம் ...

அகதி என்ற மூன்றெழுத்தின், துயர நிறம்...
உயிர்ப்பிணம். !
ஊசலாடும் இன்னுயிர்களை கண்ணீர்
அலையில் கரையவைத்து
தட்டேந்தி .. .. ..
நில், என இர் எழுத்துக்குள் தள்ளி
வலியோர் அள்ளி இட்ட தீயே
உலக அகதிகள் தினம்.!
இது கொண்டாடப் படுகின்ற தினம் அல்ல
அராயகத் தீயின் கொடூர தாண்டவத்தை
உலகிற்கு பறை சாற்றும் புரட்சி தினம்
எள்ளி நகை செய்யாதீர்..
இழி நிலை தள்ளிவிட்டீர் எமை....
நாளைய காலம் இடம் மாறலாம் உமக்கும்..

jeudi 19 juin 2014

மெய்யெனும் ஒற்றைச் சொல்லே ...

மெய்யெனும் ஒற்றைச் சொல்லே – உலகிற்கு
உயர் வேதம் என எப்படி எடுத்துரைப்பேன் ..
ஈசனே இனி எங்கே உனை நான் காண்பேன்
தீயினை சாட்சி வைத்து தாலிக்குள் தனை நிறுத்தி
தாரமாய் வந்தவளை ஏலத்தில் விற்றவன் நான்
அரசாளப் பிறந்தவனை அடிமை யென ஆக்கிவைத்து
கொடு நாகம் தீண்டி மாண்டு மயானம் வந்தவேளை
பிணக்கூலி கேட்டுதைத்த உணர்வற்ற
சுடலையன் நான்..
விதி எனச் சொல்லி வீண் வாதம் இனிச்செய்யேன்
ஹரிச்சந்திரன் எனும் நாமம் மெய்யுக்கு உவமானம்
நம்பிக்கைத் துரோகத்திற்கு நானே அவமானம்
பிடி சாம்பல் ஆகிவிட்டேன், இனி
முடி ஆண்டு ஏது செய்வேன் ..

mercredi 18 juin 2014

நிழல் கூட்டுப் பறவைதான் நான் ..

நிழல் கூட்டுப் பறவைதான் நான்
சகோதரச் சரத்திற்குள் தன் நிறைவுற்றது
என் பிறப்பு ...
முளைத்த சிறகை விரிச்சுப் பறந்தேன்
திசை மாறவில்லை ...
அன்னை தந்த அன்பையும்
தந்தை தந்த நிழலையும்
உறவெனும் மாளிகைக்கு  
அத்திவாரம் இட்டேன்
பாசம் எனும் நூல் வேலியே
எனது அணிகலன் ...
இறக்கை விரித்த என் குஞ்சுகளும்
இல்லாத ஊருக்கு போகவில்லை
என் முகம் பார்த்து ,
புன்னகைத்துச் செல்கின்றன ...
இதயம் கனிந்து இளைப்பாறுகின்றேன்...

mardi 17 juin 2014

மகரந்தக் கூடலின் நடுவே வண்டுகளின் நடனம் ..

மகரந்தக் கூடலின் நடுவே
வண்டுகளின் நடனம் – இது
பூக்களுக்கு பிடித்த முத்தம்
 
கலைக் கூடலின் சிலைகளில்
சிற்றுளியின் நடனம் – இது
சிற்பிக்கு பிடித்த முத்தம்
 
பரீட்சை எழுத வந்த மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்
எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்.. ..
படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
படிக்காத பக்கங்களை உன்னிடம்
ஆனாலும் நீ மாணவன் என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே .. ..
எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
புத்தகம் முழுமை பெற்று தனக்கான
ஆடை அணிந்திருக்கிறது....

lundi 16 juin 2014

வடக்கில் வசந்தம் என்றார் ...

வடக்கில் வசந்தம் என்றார்
சுனாமி வந்துவிட்டுப் போன
அடிச்சுவடுகள்
அப்படியே கிடக்கின்றன...!
சத்தம் போடாதீர்கள் இறுதி யுத்தம் என்றார்
அடுத்து, தமிழர்க்கு சுதந்திரம் என்றார்..
காலையில் குளித்துவிட்டு காயப்போட்ட
கோமணத் துண்டையும் காணவில்லை ..!
மீண்டும் கருக்கல் கட்டுகிறது
காரிருள் நடுவே நால்வர்
படலையே இல்லாத என் வீட்டை
முற்றுகை இடுகிறார்கள்.. ..  ...!
 
ஐயா என்னை காப்பாத்துங்கோ...
இது என் குமர்ப்பிள்ளைகளின் கதறல்
நான் எழுந்து உதவும் முன்னே
என் முகத்தில்
சப்பாத்துக் கால்களின் உதைகள் .. ..!
நித்திரை கொள்ளவில்லை நான்
என் கண்கள் இருட்டிவிட்டன
விழி திறந்த வேளையில்
காலைச் சூரியன் வந்திருந்தான்
என் பிள்ளைகளை காணவில்லை .. ..!
புயல் வந்துவிட்டுப் போன
சிதைவுகளை கண்டு நடுங்கி நின்றேன்
தொலைவிலிருந்து ஒரு ஒப்பாரிச் சத்தம்
ஐயோ.. யாரு பெத்த பிள்ளைகளோ
படு பாவிக இப்படிச் செய்திட்டு
போட்டிருக்காங்களே...!
ஓடுகிறேன் அந்த ஒப்பாரி இடத்திற்கு
நேற்று யார் யோரோ எல்லாம்
அழுகுரல் கேட்டு ஓடினார்கள்
இன்று நானும் ஓடுகிறேன்..
எமைக் காத்த கடவிளே நீ இல்லையேல்
இதுதானா தமிழரின் நியதி ...

samedi 14 juin 2014

முக நூல் நட்பென்ற அடையாளம் மட்டும்தான் இங்கே ..

முக நூல் நட்பென்ற அடையாளம் மட்டும்தான் இங்கே
அனைத்து உறவுகளும் அணிந்துள்ளீர் முகமூடி ..
எந்தப் பக்கம் மர்ம நாவல்..!
எந்தப்பக்கம் நகைச்சுவை..!                                                      
எந்தப் பக்கம் உண்மை முகம்..!
அறியேன், ஆண்டவன் இல்லை நான்
காலம் கனிந்தால் கை கோர்த்து
இன் முகம் காண தங்களிடம் வருவேன் நான்...

ஆலமரத் தோப்பிலே ஆனந்த விழுது கண்டேன் ..

ஆலமரத் தோப்பிலே ஆனந்த விழுது கண்டேன்
கிளை கொண்ட விரலினிலே குயில் பாட்டு
நான் கேட்டேன் ...
குக்குக் கூ எனும் கீதம், எதிர் பாட்டு 
பாடி நின்றான் என்னருகே ஒரு சிறுவன் ..
குயிலின் கீதமும் இவனின் குக்குக் கூவும்
ஓய்ந்துவிட

விடை கிடைக்காத கேழ்வி ஒன்று
என் மனசுக்குள்ளே ஓயவில்லை ...
தோடியா முகாரியா பைரவியா பூபாளமா
மொழி அறியா பாட்டில்  குயில் என்ன கூறியது .?
இனி ஒரு ஜென்மம் எனக்கிருந்தால்
குயிலாகப் பிறந்து குயில் மொழி அறிந்து
பாடுவேன் நானும் குயில் பாட்டு..!

vendredi 13 juin 2014

மாடலிஸ்ற் ஓவியம் கண்ட மன்மதா ...

மாடலிஸ்ற் ஓவியம் கண்ட மன்மதா
உன் தேடலில் வரைகிறாய்
வானவில்லை ..
வர்ணங்கள் தெரியாமல் என்னில் .!
 
நீ மலரம்பைத் தொடுக்கும் முன்னே
கோவைக் கிளி கொத்திவிட்டதடா
என் செவ்விதழை .!
கோலங்களை நீ மாத்தி வரைந்தாலும்
கோடை காலத்துப் பறவைதான் நான்.!
வேடம் தாங்கலுக்குள் வந்துவிடாதே நீ ....

மாடலிஸ்ற் ஓவியன் நீ ..

மாடலிஸ்ற் ஓவியன் நீ - உன்
தேடலில் வரைந்துவிட்டாய்
வர்ணங்கள் தெரியாமல்,
வான வில்லை என்னில் .!
மன்மதனே தொடுக்கிறான்
மலர் அம்பை அதில் ...
ஒற்றைக் கிளை இருந்து
இரகசியம் பேசும் என்னிரு இதழ்களில்
கோவைக் கிளிக்குமா மோகம் .?
கொத்திவிட்டது அதை .!
கோலங்களை நீ மாத்தி வரைந்தாலும்
இது கோடை காலத்துப் பறவை.!
வேடம் தாங்கல் செல்கிறது .... ....

mercredi 11 juin 2014

மல்லிகையே உனக்காக ....


மல்லிகையே உனக்காக - மலர்ச்
செண்டு வாங்கி வந்தேன்..
சோலைக் குயிலும் காலைக் கதிரும்
யாருக் கென்று கேக்கிதடி..!

lundi 9 juin 2014

பூவே உன்னை, பூக்களின் கூட்டம் அழைக்கிறது ..


பூவே உன்னை, பூக்களின் கூட்டம் அழைக்கிறது
பூச்சூட வா என்று ..
இனியவளே என் இதயக் கதவில் திறப்பில்லை
உன்னை வாழ வா என்கிறது, என் இதயம்.!
பூக்களின் பூச்சரமே ..
நீ யாருக்குச் சொந்தமடி ..?

samedi 7 juin 2014

நான், சிரிக்கிறேனா.. அழுகிறேனா..

நான், சிரிக்கிறேனா.. அழுகிறேனா..  
எனக்குள்ளே விடை கிடைக்காத கேள்வி இது
ஊருக்குள்ளே உயர்ந்தவள் என்கிறார் என்னை.!
நொடிக்கு நொடி என் இதயத்தில்
எத்தனையோ ஓட்டைகள்
இன்னும் அடைக்கப்படவில்லை
உயிர்க் கூட்டுத் துடிப்போடு எனைக் காண
ஒவ்வொரு நாளும் வருபவர்
உயிரோடும் போகிறார்
சிலர் பிணமாகிப் போகிறார்..
 
செவிப் புலன்களை திட்டித் தீர்க்கிறது
அனுதினம் நான் கேட்கும் அழுகுரல்
ஈர் ஐந்து திங்கள் உடலுக்குள் உயிராக்கி
கையேந்தும் காலத்தில் உயிரற்ற சிசு ஏந்தி
கனாக்காலம் கரைந் தோட
கடல் நீரை கையாக்கி
இவள் ஊற்றும் கண்ணீருக்கு
ஈடென்ன நான் செய்வேன்..?
யாருக்காக அழுவேன்
நான் யாருக்காகச் சிரிப்பேன்
என் தவக்கால வாழ்வில்
ஜடமாகித் தேய்கிறேன்..!
 
இமைக் கூட்டுக் கடிகாரத்துக்குள்
முள்ளாகச் சுத்துகிறது
என்னை நெருடும் ஒவ்வொரு
நொடிப் பொழுதும்.!
நான் யார்..? நான் யார்..? நான்
யார் என்ற கேள்வி எனக்குள்ளே
எத்தனை முறை நான் கேட்பேன்
எல்லோரும் என்னை,
மருத்துவ மனை என்கிறார்..!

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...