dimanche 23 décembre 2018

உன்னை நீ எழுது !!!

வாழ்க்கை வாழ்ந்து பார்க்கவே
வந்து போகும் வாலிபம் முதுமை
நோயில் வீழ்ந்து
நொடியிலும் போவோம்
பாயில் உளன்று பாடை அழைக்க
பாசம் அறுத்து மோசம் போவோம்
இன்பம் துன்பம் இரண்டும் வென்றே
இருக்கும் காலம் உன் பெயர் எழுது
கல்லில் எழுத்தானால்
கரையாது உன் வாழ்வு
கால காலத்திலும்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 21 décembre 2018

வெண்டாமரை கன்னி !!!

பஞ்சணை தழுவி மெல்ல எழுப்பிணாள்
வெண்டாமரை கன்னி
அஞ்சினேன் அவளின் ஈரஞ்சு விரல்களும்
என்னில் அபுநயம் புரியக் கண்டு

எல்லை மீறி தேகம் எங்கும்
விழியால் வரைந்தாள் ஓவியங்கள்
பருவம் பட படக்க
இமைச் சிறகுகள் விண்ணளாவ
வியப்பும் விடையும் இன்றி
மூடிவிட்டேன் இமைச் சிறைக்குள்
இருளுக்குள்ளும்
அவளின் இங்கிதங்கள் குறையவில்லை

போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்கள்
விழி முனை ஈட்டியின் காயங்களில்
எச்சில் முத்தங்கள்
எதிரும் புதிரும் சமர் எதிர் கொண்டேன்
விளக் கொளியும் இல்லை விடியவும் இல்லை
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்

காளி அவதாரத்தை இன்றுதான் நேரில் கண்டேன்
அச்சம் களைந்து அன்பே என்றேன்
கனிந்து கனவா என்றாள்
மீன்டும் துயில் கொள்ளவில்லை
வெண்டாமரையாள்
இனியும் வேண்டாம் என்றே

பாவலர் வல்வை சுயேன்

dimanche 16 décembre 2018

வற்றா வாழ்விற்கு அவனே காப்பு !!!

சொல்லும் நா சொல்லும் அன்பில் மெய் அன்பிருந்தால்
மரங்களில் பூக்களன்றி மனங்களில் என்றோ பூத்திருக்கும்

சொல்லில் வல்லோர் சொல்லும் அன்பில்
கொஞ்சும் வஞ்சம் நஞ்சில் கொஞ்சம்
நலிந்தே நா உதிர்த்திடினும்
நற் துணையாகும் நமச்சிவாயம்

வெண் பூ கொண்டு வெண் மன தேற்றிடினும்
தோற்றுவார் தோற்றி எள்ளிநகை கொண்டே
உள்ளக நஞ்சை கொட்டி நலிந்திட செய்வார்   
அஞ்சே லெனும் ஆத்மா உருக
பொருந்தக் கை தொழுதேனும்
இதயத்துள் கோயில் கட்டி
இறைவனை குடி இருத்து
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு
மலையளவே வரும் துயரும் தினையளவே ஆகும்

பாவலர் வல்வை சுயேன்

ஓர விழி ஓவியம் சிரிக்கிரது !!

உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
நாயகன் நாயகி நீயே
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்
ஓவியம் சிரிக்கிறது

வாழ் நாள் இருப்பில் வாசனை உன்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை
எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்

வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்

உன்னை சுற்றி சிலந்தி வலை
சித்திரக் கோடுகளாய்
காணும் வரைதான் கனவுலகம்
நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும்
நீரில் நீந்தும் காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு எதற்கு
சாமிக்கும் சொல்லிவிடு
அனைத்தும் இங்கே நிர்வாணங்களே

பாவலர் வல்வை சுயேன்

lundi 10 décembre 2018

ஏட்டுச் சுவடி..

ஏட்டுச் சுவடிகளை விண்ணளாவி விழி திறந்தது கணணி
உயிர் எழுத்துக்களோடு உயிர் மெய் எழுத்துகளை
உறவில் வைத்தேன்
கிளவியர் யாடை புனைந்து தொடு என்றது தன்னை

கட்டுண்ட பஞ்சு விரல்கள் முத்தமிட்டு
மொழிக் காதலுற
மெமோறி அனுக்கள் மின் அலைகளில்
தன் காதலை சொல்லியது
என் காட் டிஸ்கில் இடம் இல்லை
அன்னை தந்தையின் காதல் கடன்
இன்னும் தீர்க்கப்படவில்லை
எப்படி இதயம் கொடுப்பேன்
என்னொருத்தியிடம் (என்னொருத்தனிடம்)

காசிருந்தால் வாங்கலாம் கனதி ஏற்றும் காட் டிஸ்க்
வாங்கிய பின் தருகிறேன் என்னிதயம்
உன் விழி ஒளி மிகு எக்கிறோணில்
வான வில்லின் வர்ணங்கள் தூவி
உன் முகத்தில் என் முகம் பதித்து
பிறிண்டர் எடுப்போம்
பிரதிப் பைலில் சேர்ப்போம்
அதுவரை பொறு மனமே
எதையும் தாங்கும் பூமி எம்மையும் தாங்கும்

பாவலர் வல்வை சுயேன்

mardi 4 décembre 2018

அகவை காணும் அன்பு பாவலா வாழ்க நீ !!!


தமிழீழ தேசத்தின் ஆஸ்தான பாவலனே
விடிந்தும் விடியாத விடை இல்லா வாழ்வில்
மூழ்கி தவிக்கிறோம்

இருந்தும் இல்லாதாரும்
இல்லாது இருப்போரும்
அள்ளும் துயர் அலையில்
அனுதினமும்
வாழ்வாண வாழ்வு
வாழ்வோம் என்று
தேடும் விழிகளின் தேக்க நீர்
வற்றா ஜீவனொடு வறுமையில்

வழிமேல் விழி நோக்கி
பொறுமை சிலையாய்
பூகம்ப மலையாய்
அமைதி கடலில் மூழ்கி கிடக்கிறோம்

வா வா புலவா புதுவை இரத்தினமே
இன்றுன் பிறந்தநாள் காண்போம் இனிதாக
வா வா புலவா
ஆஸ்தான புலவா புதுவை இரத்தினதுரையே
வாழ்க தமிழ் வாழ்க வீரம்
வாழ்க நின் தமிழீழ பாக்கள்
வாழ்த்துகிறோம் வாழிய புலவா
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீ
எமதீழ அரசின் அவை புலவனே
என்றும் பதினாறே உனக்கு

03.12.2018
அன்புடன் - பாவலர் வல்வை சுயேன்

மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விண் பூத்த ஒளியும் விடிவில்லா வாழ்வும்
காணாக் கண்கள் பனித் தொழுக       
அன்றாடம் வாசலிலே
அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்தார்
மண் மீட்பு போரிலே மாவீரர்கள்

எள்ளி நகை கொண்டே கொள்ளி இட்ட கொடும் பகையே
ஆண்ட இனம், மானம் இழந்து மண்டியிட்டு மாழுமோ
தன் தேசம் இழந்து தாழ் பணிந்து வீழுமோ
தமிழீழம் தலை சுமந்தான் மாவீரன் பிரபாகரன்
அவன் வழி நடந்து களம் காத்த
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விடுதலைத் தீ வேழ்வியிலே
விடிந்த ஈழம் நீ அறிவாயடா
விடுதலைக்கு கொடுத்த விலை
எம துயிரே விலை ஏதடா
தமிழ் பாலூட்டி வளர்த்தாள் தமிழீழத் தாயல்லவா
தன்மானச் சேலை கொடுத்தார் மாவீரர் இவரல்லவா

முன் ஆன்ட எம் அரசின் முடி வாழ் கண் சுமந்த புலி
இந் நாள் தனிலும் இலங்காபுரி ஈன்ற கொடி
கோட்டை கொத்தளம் வென்று அரசுரிமை ஆட்சி தந்து
வடக்கும் கிழக்கும் ஒருமையின் உயிர்க் கூடென்றார்

தாயகக் கனவை தினம் நினைந் தெழு மனமே
வஞ்சக வலை அறுத்து வாழ்வியல் வளம் தேடு
உன் தாய்த் திரு நாடு தமிழீழமே
வாகை சூடிடல்லாம் வென்றெழு தினமே
சுய உரிமை சுதந்திரம் இல்லையேல்
இறந்தவர் நீரே

மண் மீட்பு போரிலே தமிழீழம் மலருமடா
அன்றாடம் வாசலிலே அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்து அரசுரிமை தந்தார் மாவீரரே

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...