திங்கள், 17 மே, 2021 

நினைவேந்தல் !!!

 

மண்ணின் விடுதலை மண்ணிலே

புதைந்தது மே, பதினெட்டிலே

விடுதலை வேழ்வியில் யந்துக்கள்

விஷம் கொட்டியதும் மே, பதினெட்டிலே

இனச்சுத்தி கொலையில் இலெட்சம் தமிழர்

முள்ளியில் மூழ்கினர் மே,பதினெட்டிலே

 

விடுதலைக்கே தலை கொடுத்தோம்

விடுதலை இன்றியே வீழ்ந்தன தலைகள்

முள்ளி வாய்க்கால் முடிவும் அல்ல

முற்றுப்பெற்ற முகவுரையும் அல்ல

அன்னைத் தமிழால் அகம் உருக்கி

இன்னுயிர் உறவுகளை நினைவேந்தி

வணங்குவோம் இந்நாள் மே,18

 

கொடுநிலை வீழ்த்தி கொள்ளி இட்டோரே

அணையாத் தீ அகிலத்தின் இருப்பு

ஆணை இட்டு அணை இட்டாலும்

அலை என எழுவோம்

அக வணக்கம் செய்வோம்

நீதியின் விழியில் நீரோட்டம்

நிச்சயம் உலகம் செவி சாய்க்கும்

 

உலக மன்றிலே மனு வைத்தோம்

உரிமைத் தேசம் மீழ் பெறுவோம்

கருணைக் கண்கள் திறக்கிறது

கயவர் படை சிறை சேரட்டும்

 

தடைகள் உடைய தலை தருவோம்

தன்மான உயர்வுக்கு உயிர் தருவோம்

முள்ளிக் கடலே உரம் ஊட்டு

சுதந்திர தாகம் தணியட்டும்

முட்டும் பகை முடி அறுத்து

முழங்கு சங்கே விண்ணும் அதிர

 

பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

வர்ணக் கிளி !!!


 

கொஞ்சிக் கொஞ்சி

கொஞ்சு மொழி பேசும்

பஞ்ச வர்ணக் கிளியா நீ

 

சிற்றுடை மேனி

சிற்றாடை உடுத்தி

சொப்பனத்தில் என்னை

இமைச் சிறகால் மூடுகின்றாய்

 

காதோரம் லோலாக்கு

வளர் மதியோ அறியேன்

கார் கூந்தல் நீவி

உன் கன்னம் கிள்ளுதடி

 

அஞ்சுதே மனம் ஏஞ்சலே

மூடிய விழிகளுக்குள் என்னை

ஏர் பூட்டி உழுகின்றாய்

சிறைப் பட்டு சிதைந்தாலும்

நிறங்கள் பெற்ற வரம்

கரங்கள் பெறத் துடிக்கிறதே

 

நீலக் குயிலே

நிறங்களில் ஒன்றாகவா

நியம் தனில் ஒன்றாகவா

மௌனத்தில் நீ இருந்தால்

மரணித்து போகின்றேன்

 

காலம் கடந்தாலும் கை வீசி வா

எமனிடம் மனுத் தாக்கல் செய்து

உன் மடி சாய வருவேன் நான்

 

பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 5 அக்டோபர், 2020

உஷா !!!

என் பெயர் உஷா

சிறிய சாளரம் எங்கள் வீடு

ஆங்காங்கே கூரையின் சிதறல்கள்

சூரிய ஒளியும் மழையின் தூறலும்

வறுமைக் கோட்டை அளந்தபடி

நாளாந்தம் எங்கள் வீட்டுக்குள்

வந்து போகின்றன


இது அவர்களுக்காக போடப்பட்ட

வாசல் கதவுகள் அல்ல

யுத்தம் என்று சொல்லி

நித்தம் வந்து

எம் வாழ்விலும் எமது வீட்டிலும்

பகைவனின் போர் விமானங்கள்

கொத்தணிக் குண்டுகளால் சிதைத்த

விழுப் புண்கள்

 

மாற்றுக் கூரை போடுவதற்கு

வருமானம் போதவில்லை

குடும்பத் தலைவனும்

குண்டடிபட்டு போய்விட்டான்

குடும்ப எண்ணிக்கையில்

மாண்டவர் பாதி

எஞ்சியவர் மீதி

 

இளமை அழிந்தும் முதுமையோடு

புதுச் சட்டைகள் தைத்துத் தைத்து

ஓடிக்கொண்டே இருக்கின்றேன் 

திண்ணையில்

 

ஓடிய தூரம் தெரியவில்லை

தேசங்கள் கடந்து ஓடியிருப்பேன்

தணியாத் தாகம் எனக்கும் உண்டு

அவ்வப் போது ஓயில் சிந்தி

என் நாவை நனைத்து விடுவாள்

பாவம் தேனீரும் அருந்தாள்

என் தோழி

 

வேதனை விழிம்பில் விம்மிச் சினந்து

பொவின் நூல்கள் சிக்கித் தடுமாற

உள்ளம் நொந்து

ஊசியும் உடைந்துவிடும்

 

தன் பசி அடக்கி

மாற்றூசி வாங்கிவிடுவாள் தோழி

யார் யாருக்கோ எல்லாம்

சட்டை தைக்கும் நான்

என் தோழிக்காக ஒரு புதுச் சட்டை

தைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம்

எனக்குள்ளே

ஆனால் இயலவில்லை

குடும்ப ஏழ்மை என் தோழியை

துரத்திக் கொண்டே இருக்கிறது

 

ஒட்டுப் போட்ட சட்டைகளையாவது

இடை இடையே கந்தல் இன்றி

தைத்துக் கொடுக்கும் மகிழ்வோடு

என் தோழியின் கால்களை

முத்தம் இடுகின்றேன்

பயணம் முடியவில்லை

இப்படிக்கு – உஷா

 

பாவலர் வல்வை சுயேன்

  நினைவேந்தல்   !!!   மண்ணின் விடுதலை மண்ணிலே புதைந்தது மே, பதினெட்டிலே விடுதலை வேழ்வியில் யந்துக்கள் விஷம் கொட்டியதும் மே, பத...