mardi 6 octobre 2020

வர்ணக் கிளி !!!


 

கொஞ்சிக் கொஞ்சி

கொஞ்சு மொழி பேசும்

பஞ்ச வர்ணக் கிளியா நீ

 

சிற்றுடை மேனி

சிற்றாடை உடுத்தி

சொப்பனத்தில் என்னை

இமைச் சிறகால் மூடுகின்றாய்

 

காதோரம் லோலாக்கு

வளர் மதியோ அறியேன்

கார் கூந்தல் நீவி

உன் கன்னம் கிள்ளுதடி

 

அஞ்சுதே மனம் ஏஞ்சலே

மூடிய விழிகளுக்குள் என்னை

ஏர் பூட்டி உழுகின்றாய்

சிறைப் பட்டு சிதைந்தாலும்

நிறங்கள் பெற்ற வரம்

கரங்கள் பெறத் துடிக்கிறதே

 

நீலக் குயிலே

நிறங்களில் ஒன்றாகவா

நியம் தனில் ஒன்றாகவா

மௌனத்தில் நீ இருந்தால்

மரணித்து போகின்றேன்

 

காலம் கடந்தாலும் கை வீசி வா

எமனிடம் மனுத் தாக்கல் செய்து

உன் மடி சாய வருவேன் நான்

 

பாவலர் வல்வை சுயேன்

lundi 5 octobre 2020

உஷா !!!

என் பெயர் உஷா

சிறிய சாளரம் எங்கள் வீடு

ஆங்காங்கே கூரையின் சிதறல்கள்

சூரிய ஒளியும் மழையின் தூறலும்

வறுமைக் கோட்டை அளந்தபடி

நாளாந்தம் எங்கள் வீட்டுக்குள்

வந்து போகின்றன


இது அவர்களுக்காக போடப்பட்ட

வாசல் கதவுகள் அல்ல

யுத்தம் என்று சொல்லி

நித்தம் வந்து

எம் வாழ்விலும் எமது வீட்டிலும்

பகைவனின் போர் விமானங்கள்

கொத்தணிக் குண்டுகளால் சிதைத்த

விழுப் புண்கள்

 

மாற்றுக் கூரை போடுவதற்கு

வருமானம் போதவில்லை

குடும்பத் தலைவனும்

குண்டடிபட்டு போய்விட்டான்

குடும்ப எண்ணிக்கையில்

மாண்டவர் பாதி

எஞ்சியவர் மீதி

 

இளமை அழிந்தும் முதுமையோடு

புதுச் சட்டைகள் தைத்துத் தைத்து

ஓடிக்கொண்டே இருக்கின்றேன் 

திண்ணையில்

 

ஓடிய தூரம் தெரியவில்லை

தேசங்கள் கடந்து ஓடியிருப்பேன்

தணியாத் தாகம் எனக்கும் உண்டு

அவ்வப் போது ஓயில் சிந்தி

என் நாவை நனைத்து விடுவாள்

பாவம் தேனீரும் அருந்தாள்

என் தோழி

 

வேதனை விழிம்பில் விம்மிச் சினந்து

பொவின் நூல்கள் சிக்கித் தடுமாற

உள்ளம் நொந்து

ஊசியும் உடைந்துவிடும்

 

தன் பசி அடக்கி

மாற்றூசி வாங்கிவிடுவாள் தோழி

யார் யாருக்கோ எல்லாம்

சட்டை தைக்கும் நான்

என் தோழிக்காக ஒரு புதுச் சட்டை

தைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம்

எனக்குள்ளே

ஆனால் இயலவில்லை

குடும்ப ஏழ்மை என் தோழியை

துரத்திக் கொண்டே இருக்கிறது

 

ஒட்டுப் போட்ட சட்டைகளையாவது

இடை இடையே கந்தல் இன்றி

தைத்துக் கொடுக்கும் மகிழ்வோடு

என் தோழியின் கால்களை

முத்தம் இடுகின்றேன்

பயணம் முடியவில்லை

இப்படிக்கு – உஷா

 

பாவலர் வல்வை சுயேன்

mercredi 30 septembre 2020

நியமா நிழலா !!!


உன்னை காணவில்லையே என்று

கடவிளிடம் முறையிட்டேன்

கடுகதியில் வந்துவிட்டாய்

இறைவனின் மகளா நீ


பொய்கள் விளைந்திருக்கும் பூமியில்

நியங்களை தேடி ஓடுகின்றேன்

இறுதிவரை காத்திராதே

நான் வருவேன் என


பாவலர் வல்வை சுயேன்

dimanche 21 juin 2020

இல்லை ஒரு பாதுகாப்பு !!!


அள்ளிக் குளித்து ஆடை அணிந்து
அல்லி உதட்டில் செங்காந்தள் தடவி
விழி நீள் ஓரத்தில் அஞ்சனம் தீட்டி
கொண்டை மாலையில் தேன் தளிராட

கூந்தல் மேகம் கூட்டி அணைத்து
கானக் குயிலே நீ கூவாவிடில்
பருவப் பெண்ணையும்
பார்ப்பார் எவரோ
வெள்ளிக் கொலுசொலியில்
சங்கீதம் கேட்டு
பட்டாம் பூச்சியாய் பறக்கிது மனசு

மின்னும் தாரகைகள் கேட்கின்றன
பூமியில் யார் அந்த நிலவென்று
அழகு பாதி ஆடை பாதி
அஞ்சன ஒளியில் புலரும் நிலவே
அடுக்களை தீயில் உருகும் பொம்மை நீ

ஒவ்வொன்றாய் திருடுகிறார்
உன்னிடத்தில் ஏதேதோ
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு

பாவலர் வல்வை சுயேன்

vendredi 19 juin 2020

காவியமா ஓவியமா !!!


தண்ணீர் தண்ணீர் என்று
தாக நிலை பெருக்கெடுத்து
ஜீவன் துடி துடிக்க
தன்னிலை தாண்டா
நூல் வேலிக்குள் நின்று
தந்தையை மகனாக்கி
தாயான மகளே பணிந்தேன்

ஆகாரமோ நீராகாரமோ
கடுகளவேனும் இன்றி
சிறை வதையில்
வீழ்ந்துயிர் போகவே
தண்ணீருக்கும் தடை விதித்தோர்
தம் நிலை இழந்து கூன் னுருக
ஆனந்தக் கண்ணீர் சிந்தின
சிறைக் கம்பிகள்

புரட்சியாளனின் எழுச்சி மகளே
புடம் போட்ட தங்கமே
ஆடக்கு முறையாளரும்
கரைத்திட முடியாத
காவிய ஓவியம் நீ

பாவலர் வல்வை சுயேன்

jeudi 18 juin 2020

கொரோனா கோழி !!!


 கூவுது கூவுது சேவல் கூவுது
கொரோனா கோழி கொக்கரித்தே கூடுது
முகம் அறியா முகநூல் அரங்கே
முழுதும் நனையுதப்பா
தடம் அறியா புயலும் வீழ்ந்து
சாமிக்கும் சேதம் அப்பா

வேரடி மண்ணுக்கு நீர் ஊற்று
வேண்டாம் விழலுக்கு கூப்பாடு
முந்தானை இல்லா முயல் முகத்தில்
வழிந்தே ஏங்கிது வலைக் கூடு

கொரோனா கோழியே குங்கும உதட்டில்
கொல்லாமை தவிர்ப் பேது
இதில் இல்லாமை நிலை ஏது
மானே வா.... மயிலே வா…..
மானத்தை இழந்து வீதியில் நிற்றல்
யாருக்கும் உதவாது

கண்ணே மாறியதேன் வேழமும் வீழுதிங்கே
இழை நூல் வேலியும் இடை அகற்றி
காசுக்காக உன்னை இழக்கின்றாய்
மானச் சேலை மறந்தே போச்சோ
அதற்கொரு விலை உரைக்கின்றாய்

அல்லாடும் மனசே நெறி ஊற்றில் நீந்தாயோ
உன்மான உயர்வுக்கு தணல் கூட்டை தணியாயோ
பொன்மானே பெண் மானே போனது போகட்டும்
நல வாழ்வில் நாணமுறு நலிந்தேகும் புயல் காற்று
கற்றோரும் இங்கில்லை கல்லாரும் இங்கில்லை
கரை ஏறா காமத்தில் கண் இருந்தே குருடானார்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 17 juin 2020

ஆண்டவன் தரிசனம் எதற்காக !!!

விண்ணைத் தொடுவது இனியது
மண்ணின் காதல் வலியது
என்னுயிர் இன்றி போனாலும்
தமிழினம் வாழ
தனி நாடு
இப்புவிதனிலே இல்லை என்றால்
உன்னை நினைந்தேன் இன்னும் வழிபாடு

ஆலய மணிகள் எதற்காக
ஆண்டவன் தரிசனம் எதற்காக

மதங்களாலே மதங்கள் ஏறி
இனச்சுத்தி வதையில்
உயிர்களை கொய்கின்றார்
அடியவர் இல்லா இடந்தனிலே
இறைவா கோயில் நிலைக்காது

நின் நிழல் திருவடி நின்றாறி
தமிழினம் வாழ வாழ்வு கொடு
கோன் உயர் கொடி உயர்ந்திங்கு
குலம் தழைப்போம் குலச் சாமி

பாவலர் வல்வை சுயேன்

lundi 18 mai 2020

நினைந்துருகுதே நெஞ்சம் !!!


 பனி மலை இடுக்கின் பாரியாதங்களே
வசந்த காலம் வந்ததோ,
பூத்துக் குலுங்குகிறீர்
நடு நிசி நரிகளின் ஓலம் கேக்கிறது
நாளை இடியுடன் கூடிய புயலும் வரும்

பூவும் பிஞ்சும் உதிரும்
பூத்த கொடியில் உதிரம் சிந்தும்
ஆற்றொணா துயரில் கிளைகளும் ஒடியும்
தமிழா இன மான வேர் அறுந்தால்
எந்த மண்ணிலும் வாழ்வில்லை உனக்கு

முற்றத்து வேம்பும் சுற்றத்து ஆலும்
முப்பத்திரெண்டு ஆண்டுகள்
விழுதூன்றிய காலம் அது
உலக அரங்கம்
அஞ்சலில் தந்த முகம் உனது

நின்றாளும் தமிழுக்கு நிலையான அரசொன்று
உலகாள் அரங்கில் புலிக்கொடி உயர்ந்து
தமிழீழப் புலிகளே தந்தார் ஈகம் அதற்கு
நீசரது சதி நிலையாலே நிலை சாய்ந்தோம்
விலை ஏது கொடுத்த உயிர்களுக்கு

நினைவிழக்குமோ அந்த முள்ளிக் கடல்
அதன் அலைகள் இசைக்கிதே இன்றும்
முகாரி 
வாழ்வாதாரம் இழந்து வாழ்வியல் ஒடுங்கி
கூடார வாழ்வில் குடியானோம்
சேதாரம் ஆகாரம் ஆனது

சொரிந்த விழி நீர் வற்றி செங்குருதி ஓடி
உறவிழந்த துயரினை மறப்போமா
மற எங்கிறீர் அடி வருடிகளே
கச்சைத் துணியும் இன்றி
எஞ்சிப் பிழைத்த ஒற்றை உயிரடா இது
சுய உரிமை சுயாட்சி இன்றி சுதந்திரம் ஏதடா
கொடும் துயர் நெடுங் காடேகி
சுமக்கின்றோம் இன்னல்கள் இன்னும்

சுக போக வாழ்விற்கென நீ வாங்கிய பெட்டிப் பணம்
இழப்புக்கு ஈடாகுமா மாண்டவரெல்லாம் மீழ்வாரா
உறவிழந்து எஞ்சிய ஜீவன்களிடம்
ஒரு நொடியேனும் பேசிப்பார் சுமந்திரா
அவ்வேளையேனும் உன் அறிவுக் கண்கள் திறக்கலாம்

நெஞ்சுருக நினைவுருக
முள்ளி வாய்க்கால் வஞ்சம்தனை
நீக்கமற நினைந்தே வெஞ்சினம் உருக
செங்குருதி அலை வந்து கரை தொட்டுப் போகிறது
நாளை ஏனும் விடியாதோ தமிழீழம் என்று

பாவலர் வல்வை சுயேன்  18.05.2020

jeudi 14 mai 2020

சொப்பன சுந்தரி !!!!


செல் போன் மணியில் றிங்டோண் சொப்பனமே
அதில் பேசும் கிளி மொழி நீ மலர்வனமே
செம்பவளம் அள்ளவா செங்குளத்தில் குளிக்கவா
முல்லை மஞ்சத்தில் பொன்னுலகம் காண்போமா

அந்தி வெயில் சாயுதடி சந்தணமும் வீசுதடி
கோவில் மணி ஓசையிலே பூங்காற்றாய் தழுவுகிறாய்
செவ்வாழை குருத்தே செம்பருத்தி பூவே
மாங்குயிலும் பூங்குயிலும் வெள்ளி நிலா காணுதடி

சொல்லாத சேதி சொல்லு செல் போனில் நீதானே
சொக்கி நிக்கிறேன் சொன்ன சேதி இனிக்கிதடி
ஆல் விழுதுக் கூடத்திலே நின் வரவை காத்திருக்கேன்
வெள்ளி நிலா வந்திருச்சு உன்னைத்தான் காணலையே
சொப்பனங்கள் சேர்த்தணைத்து எழுதியதை ஏட்டில் வைத்து
அந்தி குளிக்கும் ஆதவனை அதிகாலை எழுப்பி வைப்போம்

பாவலர் வல்வை சுயேன்

jeudi 30 avril 2020

உழைப்பாளர் தினம் !!!

உழைப்போர் உலகம் மலரட்டும்
உரிமை வாசம் வீசட்டும்
சரி நிகர் சம நிலை தாழ்வின்றி
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்

சுறண்டும் வர்க்கம் சுறண்டிச் சுறண்டி
உறிஞ்சுது தோழா உன் குருதி
வீழ்ந்தே கிடந்து அடி தொழுது
அழிந்தே போவதோ மனு நீதி

வானம் பெய்யும் மழை என்று
வறண்ட நிலமாய் கிடவாதே
உழைப்போர் உரிமை உயிர் நாடி
அதை அள்ளித் தின்பதோ பெருச்சாளி
குனிந்து குனிந்து கூனிய முதுகின்
முள்ளந் தண்டே கேழ்விக்குறி

அடிமைத் தழையோ ஆலிலைச் சருகோ
ஆலின் விழுதே நீதானடா
தினைப்புனம் காணா வனக் குயிலும்
உரிமைக் குரலை எழுப்புதடா

அஞ்சிக் கிடக்கும் ஆதவரே
அகிலம் அதிர எழுந்தே நடமிடு
தாழ்ந்தவர் உண்டோ தரணியிலே
உரிமை பெற்றுட உயிர் கொண்டுவா

பாவலர் வல்வை சுயேன்
01.05.2013

samedi 18 avril 2020

ஜீவ,நதி !!!


அன்பே என்னை ஆளும் ஜீவ,நதி நீ
ஆராதனையில் அருளும் தேவி நீ
இளைய நிலா புருவ விழியில்
இருள் கால வழி காட்டி நீ
ஈர்ப்புடை பூமி என நியூற்றன் கண்டான்
அதன் ஆக்க சக்தி ஆனவள் நீ

உன் பெயர் சொல்லும் எப்போதும் என் உதடுகள்
ஊனம் அல்ல மௌனத்தில் உன் உதடுகள்
என்னவளே யாரிடம் இல்லை ஊனம்
ஏளனமே அவரவர் ஊனம்

ஐயம் கொள்வாரவர் அறியாமை தவிர்த்து ஓர் நாள்
ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல இருவர் மனசும் ஒன்றே
ஓடும் நதியிலும் சுனாமி அலையிலும்
ஔடதம் ஏறி வாழ்வெனும் படகு விட்டோம்
கொரோனா அலையில் கொல்லா அன்பில்
குவலையம் கண்டெழுவோம்
அன்பு மொழி பேசும் ஆருயிர் கிளியே
உன் வண்ண விழிகளிடம் தானே
ஆயுத எழுத்துக்களை கற்றேன்
தாய் மொழியும் வாய் மொழியும்
வார்த்து தருபவளே
என்னை ஆளும் ஜீவநதி நீயே நீயே

பாவலர் வல்வை சுயேன்

vendredi 17 avril 2020

ஏதறிவாய் ஜீவனே !!!


மாயை சூடும் வர்ண வாழ்வே
அறிவேன் உன்னை, அஞ்சேன்
அன்பு நிலையும் அறுவடை சாவும்
கண்கள் கனன்று சொரிய
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை என் செய்வோம்

ஆசைத் தூறலில் அழிந்தே வீழும் கூடுது
கட்டை எரிந்திட கல்லறை சிரித்திட
புழுவாகி பூடாகி புழுத்தலில்
உருகும் ஜீவனுக்கு
இகபர வாழ்வு இனிப்பா கசப்பா
தேடுகிறேன்,
எழுதிய புத்தகம் எங்கே
எட்டவில்லை!

தத்துவ ஞானம் தாளா நின்று
மீளா பொய்கை விட்டகல
விடை கொடு விரும்புகிறேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 7 avril 2020

பொன் வான விடியல் எப்போ ...?

செவ்வானம் சிவந் ஒழிய விளைந்த நெல் கதிர் அறுத்து
பொன்வான விடியலிலே தன்மானம் தழைத்திருந்தோமே

உள்ளத்திலே கள்ளம் இல்லை உலகிடத்தில் பொய்யும் இல்லை
லெட்சோப உயிர் மாண்டதிலே ரெத்த வடு இன்னும் ஆறவில்லே
உற்றவரும் இல்லே பெற்ற பிள்ள உயிரும் இல்லே
அள்ளிப்போன சுனாமியிலே எஞ்சியோரும் மீதம் இல்லே
எண்ணில்லாத் துயரிலே துவன்டு மனம் வீழ்ந்திருக்க
தொட்டாலே தொற்றுதடா கொரோனா
விழி நீர் வீழ்ந் ஓடியும், மீண்டெழுவார் யாரும் இல்லே

வீட்டுச் சிறை கூட்டுக்குள்ளே ஊரடங்கு உலகத்திலே
நாளுக்கு நாள் வீழும் உடல்களை எண்ணி எண்ணி
உலகச் செய்தி சுழலுதடா உயிர் வதையில்
அன்றழுதோம் தமிழீழம் மீழ
இன்றழுகிறோம் உலகே மீழ
உற்றவரை குழி மூடி மாயை விட்டகன்றும்
சுழலும் பூமிழில் சாமி உன்னை காணலையே
என்று மாறுமோ இக்,கோலம்
கொரோனா கொன்றுடத்தானோ இக்காலம்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 1 avril 2020

நிறம் மாறா பூக்கள் !!!

வண்ண வண்ண பாத்தி கட்டி
வண்ண வண்ண பாத்தி கட்டி
எண்ணங்களை விதை தூவி
சொப்பனங்கள்
இறைத்து வைத்தேன்

வாழ்க்கைச் செடி மரமாகி
நிழல் தூங்கவில்லை அம்மா
உதிர்கிறேன் சருகாய்
பாவி மனம் யார் அறிவார்

மொட்டவிழ்ந்த பூவிடத்தில்
தேனீக்களும் சொந்தம் இல்லை
தென்றல் தீண்டா வனக்காட்டில்
திங்கள் எல்லாம் தேயுதம்மா

பூவெடுத்து மாலை கட்டி
சூடித்தர யாரும் இல்லை
சீதனச் சந்தை மந்தை வெளியில்
ஏழைக்கேது வாழ்விங்கே

பூத்த கொடி பூச் சொரிய
மன்னவன் வருவானோ
நாத்து வைத்த நிலத்திலே
நாண அந்தி மூழ்குவதேன்
வா வா மேகமே
நீராட காத்திருக்கேன்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 29 mars 2020

அலாரம் அடிக்கிறது !!!


கடமை எண்ணி கடிகாரமாய்
ஓடிக் கொண்டிருந்தேன்
கனதியான வாழ்க்கை !

ஓய்ந்தாலும்
என்னை எழுப்பிவிடும் கடிகாரம்
ஓர் நாள் என்னை எழுப்ப மறந்து
அது ஓய்ந்திருந்தது
அடித்துவிட்டேன் அதனை

ஆனால் இன்றோ
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது
முற்றாக ஓய்ந்துவிட்டேன் என்பதை
அறியாமலே அது!

அழைப்பாணை இன்றி
என்னை அழைத்து வந்த இயமன்
கடிகாரத்தை பார்த்து
சிரித்துவிட்டே வந்தான்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...