யாழ் கோட்டைச் சிறைச்சாலை..
அகண்ட பெரும் அகழி சூழ் நடுவே
உடலங்களை கற்களாக்கிய மமதையில்
கம்பீரத்துடன் நிற்கிறது
யாழ் கோட்டைச் சிறைச்சாலை
இது ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே
ஓர வஞ்சனை கொண்ட கோட்டைச் சிறை .. ..
இச், சிறைக் கதவின் கம்பிகளில்
காது கொடுத்துக் கேட்டேன்
ஒவ் வொன்றும் சொல்கிறது
ஓராயிரம் துயரங்களின்
கண்ணீர்த் துவலைகளை.. ..
இச், சிறைச்சாலை வாசல் முற்றத்தில்
பாதம் வைத்தேன் பாதம் நனைத்த ஈரம் கண்ணீர் மல்கி காண்பித்தது
அங்கே மிதந்த கண்ணீர் ஓடங்களை
குற்றம் அற்றவரையே இக்கோட்டை
நித்தம் காவு கொண்டதாம்
ஊர் வளைத்து உறவை அள்ளிய இராணுவம்
தாய்மண் பிரயைகளை இங்குதான்
சிதைத்து சின்னாபின்னம் செய்தார்களாம்
இங்கு அடைக்கப்பட்ட குற்றவாளிகளை
பத்து விரல்களுக்குள் எண்ணிவிடல்லாம்
குற்றம் அற்றோரின் எண்ணில்லா எண்ணிக்கையை
தண்ணீரில் எழுதி விட்டார்கள் தரையில் இல்லை
சிறையல்ல இது சித்திரவதைக் கூடம்
இங்கிருக்கும் சுவர்களுக்கு வண்ணம் பூசப்படவில்லை
தமிழனின் குருதி எடுத்தே நிறம் பூசப்பட்டிருந்தன
தணியாத் தாகம் தணித்திட தகர்த்தனர் தமிழ் புலி வீரர்
தகர்ந்தது, யாழ் சிறைக் கோட்டையும் கொடுமையும்
என்ன சாபமோ ஏன் இந்த யாகமோ
மீண்டும் தேடுகிறோம் விடுதலையை..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...