அப்பன் ஆத்தா ஆரும் இன்றி குப்பையிலே நீ
என் செல்லமே..நீ குற்றம் ஏதும் செய்யவில்லை
கையேந்தி அலைகிறாய் வாழ்விலே..
எச்சில் இலை நீ அல்ல எச்சிக்களை காட்டேரிகள்
இச்சையிலே காமுற கருவாகி வந்தவளே
கலங்காதே என்பேனா..
அற்றவராய் அனாதையாய் நீ பூப்பெய்து பூத்திருக்க
உத்தமராம் ஊர் நரிகள் எவர் எவரோ நடு நிசியில்
இச்சையொடு தின்கிறார் உன் சிற்றுடலை
உன் வெற்றுடம்பில் வேதனைகள்
வெட்ட வெளிச் சோதனைகள்
கண்ணீரே வாழ்வாச்சு சென்னீரே சோறாச்சு
என் செய்வாய் நீ என் செல்லமே..
கள்ள நகை கயமை செய்து மன்னவராய் உலாவும்
சின்னவரே கேளீர், நீர் போடும் சட்டையிலே
எங்காச்சும் ஒளிந்திருக்கா
யாதி மத பேதம் எடுத்துரைப்பீர்
ஆயிரம் கிழிசல்கள் உனக்குள்ளே
அஞ்சாதே அடைத்துவிடு
நீயும் புனிதன் ஆகலாம்
சிந்தனையில் நல் நாத்து வைத்து
அன்பெனும் ஊற் றுறைத்து
பிஞ்சுகளை நெஞ்சிரித்தி நேசக் கரம் நீட்டு
பாசக் கிளை ஊஞ்சலிலே நேசக் குழந்தைகளின்
அன்னை தந்தையாகலாம் அன்பு செய்வீர்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...