மெய்யிலே பிறந்து
பொய்யிலே முக முத்திரை பதித்து
வளர்பிறை விழி
விம்பத்துள் சிக்கிமுக்கி பத்தவைச்சு
முகநூல்
பின்னலில் தையலாள் அழைக்கிறாள் !
கவனம் கவனம் மகனே
சிக்கிச் சிதையாதே
இவள் காணும் உறவு
ஆயிரம்
இவள் போடும் வேடம்
ஆயிரம்
பொல்லாத கைங்காரி
வாய் வீச்சில் வளைகாரி
இல்லாத நோய் சொல்லி
இரங்கும் உன்னிடம் காசறுப்பாள்
காணாத்தூரம் உனை
எறிந்து கண்ணுக்குள்ளே நீயே என்பாள்
கரைபுரளும்
வாழ்வில் நுரை குமிழி நீயே கண்ணா
ஒவ்வாத ஒன்றுக்கு
இலைமறையாய் பறக்காதே
இல்லறத்தில்
இல்லாள் இருக்க நல்லாள் அவளென நம்பாதே
ஆகாசம்
இருண்டழுதால் ஆறு குளம் நிறைவு கொள்ளும்
ஆழியிலே நீ வீழ்ந்
தழுதால் வம்ச நெல்லும் எரிந்து போகும் !
வண்ணச் சிறகே வீண்
எரிந்து எண்ணச் சிறகை உதிர்க்காதே
தரணி ஆள் என்
செல்வா தாங்காது தாய் மனசு
ஏமாற நீ இருந்தால்
ஏமாற்றும் உலகும் உன்னை .... !
பாவலர் வல்வை
சுயேன்.
12.05.2016
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...