vendredi 25 novembre 2016

மாவீரன் லெப்டினன்ட் மாமா (303,பாலையா)



தமிழ் குலம் காக்க வந்த செல்வா காமாட்சியின் இளம் தளிரே
மறக் குலக்கொடி அழகே அசிட்மணியின் ஆசைச் செல்வா
இலையுதிர் காலம் அல்லவே நீ உதிர்ந்து செல்வதற்கு
அடிமை விலங்குடைத்து இமை திறந்து துயில்கிறாய்
நாளை விடியும் ஈழம் என்றே துயிலும் இல்லக் கோயிலிலே

இளைய திலகமே எங்கள் பாலா
சின்னவனாய் நீ செய்த குறும்பு
இன்னும் என் மனசில் கரும்பு 
கலைந்த கேசம்தனை கையில் சொருகி
நீ கேட்பதோ பத்துச் சதம்தான்
பத்துரூபாய் உன் சட்டையில் நுழைந்தால்
பாரம் என்றே ஓரம் போவாய்
ஒற்றை ரூபாய் உன் கையில் முத்தம் இட
குளிர்ந்த மனக் குன்றேறி
பரடைஸ் வாசலிலே நீ நிற்பாய்
பத்துச் சதம்தான் குச்சி ஐஸ்
மிச்சம்தனை திருப்பித் தந்து
டாட்டா செல்லி நாளைக்கும் வாண்ணா என்பாய்

மீண்டும் மீண்டும் நாளை வருகிறது உன்னை காணவில்லை
நாளை மலரும் ஈழத்தில் காணலாம் என்றோ
விடிவின் விடுதலாக்காய் உன் சுவாசம் தூவிவிட்டு
துயிலும் இல்லத்தில் உற்ற தோழரோடு துயில்கிறாய்

அடிபணி வாழ்வுக்குள் அஞ்சி கிடக்காதவன் நீ
அராயகக் கொடியோரை அழித்துப் பொசுக்கியவன் நீ
தமிழச்சித் தங்கையை காமுற்ற காடையனின்
கண்களை களைந்து கருக்கியவன் நீ

போர்க்களம் தனில் பயிற்சி முகாம் செல்லாமலே
பெரும் படையணி இராணுவத் தொடரினை
தனி ஒருவனாய் சமராடி வென்று ஊர் மக்களை காத்து
வரலாறு படைத்த 303,பாலையா நீ

அமைதிப் படையென்று அலையேறி வந்தவனும்
பொய் கொண்ட போர்வைக்குள் புறையோடிப் போனவனும்
அமைதிக் காலச் சூழலில் சுற்றி சிறை கொண்டவேளை
குப்பி மாலை கடித்து மறவர்படை காத்தவன் நீ
எடுத்த சபதம் முடிக்கும் மறக்குலத் திலகமே
செந்தமிழ் வாயினில் செங்குருதி பாய்ந்தும்
விழியை மூடவில்லை நீ விடியலை காண்பதற்கே
வேங்கைத் தலைவனின் கள முனைக் காவலா

நஞ்சினை உண்டு வெண் சமராடிய உன் சந்தண மேனியை
வஞ்சகர் விடவில்லை வதைத்துத் துவைத்து
வாகனத் தொடரில் கட்டி இழுத்திட
வித்துடல் தழுவிய கற்களும் முற்களும் தாய்மண் மடியும்
ஊமை கண்ட கனவாய் செங்குருதி குளித்து சிவந்து கொதித்தன
இளம்பிறை நிலாவே இளைய திலகமே
உயிரின் உயிரே எங்கள் பாலா
முந்திச் சென்றாய் நீ மூத்தவர் பின்னே
விடியல் கீற்றாய் அறிவொளி வீசும் அன்புச் சோதரா
காந்தழ் மலர் தூவி தொழுகின்றோம் உன் பாதம்
சுதந்திர மலர்வுக்கு மாவீரரின் உயிரே காப்பு
ஈகம் இதுவல்லால் வேறேதும் இல்லை .....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...