samedi 21 novembre 2015

மாவீரர் ...



அடிமை கொடு நிலை அறுபட உடைபட - விடுதலை
வேண்டி போர்க்களம் மேவி இன்னுயிர் ஈந்தோரே, மாவீரர்கள்...
இறைவன் முதற்கொண்டு இதிகாசம் முதலாய்
இன்றுவரை இவருக்கு நிகர் எவருமே இல்லை 
தாய் மண் மீட்புப் போரின் மரபுத் தோன்றலே மாவீரர்கள்

கள முனை என்ன பெருங் கடல் எல்லை என்ன
கணைகளை ஏந்தி கணை எதிர் மோதி
வெடியாகி ஒளியாகி விடுதலை கீற்றாகி
கொடியவர் பாசறை எங்கும் விஸ்வரூபத் தீ எழுப்பி
சாவையே சரித்திரமாய் எழுதிய அக்கினிக் குஞ்சுகள் மாவீரர்கள்

பாசக் கொடியிலே பூத்த மலர்கள் இவர்கள்  - சொந்த
பந்த நேசம் எல்லாம் சூழ நெய்தல் என வாழ்ந்தவர்கள்
தாய் நிலம் சிறைபட்டு சிதைந்திடக் கண்டு
தாய் நில விடுதலைக் காதலிலே தாயையும் பிரிந்தார்
இளமைக் கால கனவுகளை இரும்பறை வைத்தார்
உதிரக் காட்டிலே உறவுக் காகவே
விடுதலை மூச்சை சுவாசமாய் உண்டார்
நேச மழை விட்டு நொடிப் பொழுதேனும் காய்ந்ததில்லை
பகைவன் பாசறை எரித்தே தம் உயிர் ஈர்ந்தார் மாவீரர்கள்

அற்றவராய் நுழைந்தவரே தாய் நிலம் பறித்து - கொற்ற
வராய் எழுந்து கொடும் கோண்மை புரிந்திட்ட போதில்
கொடு நிலை களைந்து அடி பணி நிலை அழித்து
சுய நிர்ணயம் உயர்த்தி சுதந்திரக் கொடி தந்தார் மாவீரர்கள்...
இன்று எங்கே தமிழா உன் சுதந்திரம்
இன்று எங்கே தமிழா உன் வாழ்விடம்
காட்டிக் கொடுப்பும் கயமை கரு நாகங்களும்
கூட்டிக் கொடுப்பில் கூதல் துவட்டியதில்
மீண்டும் போனதடா உன் வாழ்விடம்
மீளாச் சிறையில் அல்ல, உன் தாய் நிலம்

அடி பணி நிலை ஏன் தமிழா கொடு நிலை களைந்திட  - நீ
எழு எழு விடியும் முடியும் உன்னாலும், தமிழீழம் படைத்திட
உன் அண்ணன் தானே தேசியத் தலைவன் பிரபாகரன்
தமிழின உயர்வுக்கே பகை உழுது விடுதலை விதை விதைத்து
விருட்சம் தந்தான்.....
தமிழீழ ஆட்சியை தரணியிலே படைத்தான்.....
உருவான தமிழீழம் இல்லாது போவதோ?
தமிழீழக் கனவு கறை ஊற்றில் கரைவதோ?
பாசறை எரித்த மாவீரன் அழைக்கிறான்!
அடிபணி நிலை அறுத்த, மாவீராங்கனை அழைக்கிறாள்!
மாவீரர் முகத்தை பாரடா மண்ணின் மைந்தர் இவரேதானடா...

நவம்பர் மணி ஓசை கேக்கிறதே துயிலும் இல்லங்கள் எங்கேயடா?
உனக் கொரு தாய் நாடு இல்லை எனில் உன் உயிரே ஊனம்தானடா...
கார்த்திகை பூக்களே துயிலுங்கள்
காலம் கனிய வைப்போம் விழி திறவுங்கள்
ஒரு கணம் உமை வணங்கி நிமிர்கின்றோம்
தமிழீழ விடியலை விரைந்தே  மீட்டுடுவோம்... இது உறுதி ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...