கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...அரசு தந்த அரிசி கிள்ளி கஞ்சிக்கலயம் வச்சிருக்கேன்
குறுனலோடு கூழாங் கற்களும் குதித்தவியுதே பொறுத்துறங்கு
கண் மணியே கண்ணுறங்கு...
வகிடெடுத்த வாழை மீனை அம்மி அரைத்து குளம்பாக்கி
வசஞ்சு ஓடும் வஞ்சிரன் மீனை பொரித்து மெல்ல பொடியாக்கி
வாய் அமுது ஊட்டத்தானே தாய் மனசு ஏங்குது
மழலை உன் வதனம் பார்த்து வான் நிலவும் ஒழியுது
ஏழை நூலில் ஆடும் செல்வா என் செல்வமே நீ உறங்கு
நீண்ட நாள் அழுதுவிட்டேன் விழி நீரும் முடிஞ்சுதடா
கார் முகிலாள் கொட்டுகிறாள் உன் அமுத வாயில் துளி முத்து
சாமம் இப்போ மூன்றாச்சு ஊரும் உறங்கி நேரமாச்சு
முத்த மழை துளி குடித்து தூளியிலே நீ உறங்கு
கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...