mardi 6 octobre 2020

வர்ணக் கிளி !!!


 

கொஞ்சிக் கொஞ்சி

கொஞ்சு மொழி பேசும்

பஞ்ச வர்ணக் கிளியா நீ

 

சிற்றுடை மேனி

சிற்றாடை உடுத்தி

சொப்பனத்தில் என்னை

இமைச் சிறகால் மூடுகின்றாய்

 

காதோரம் லோலாக்கு

வளர் மதியோ அறியேன்

கார் கூந்தல் நீவி

உன் கன்னம் கிள்ளுதடி

 

அஞ்சுதே மனம் ஏஞ்சலே

மூடிய விழிகளுக்குள் என்னை

ஏர் பூட்டி உழுகின்றாய்

சிறைப் பட்டு சிதைந்தாலும்

நிறங்கள் பெற்ற வரம்

கரங்கள் பெறத் துடிக்கிறதே

 

நீலக் குயிலே

நிறங்களில் ஒன்றாகவா

நியம் தனில் ஒன்றாகவா

மௌனத்தில் நீ இருந்தால்

மரணித்து போகின்றேன்

 

காலம் கடந்தாலும் கை வீசி வா

எமனிடம் மனுத் தாக்கல் செய்து

உன் மடி சாய வருவேன் நான்

 

பாவலர் வல்வை சுயேன்

lundi 5 octobre 2020

உஷா !!!

என் பெயர் உஷா

சிறிய சாளரம் எங்கள் வீடு

ஆங்காங்கே கூரையின் சிதறல்கள்

சூரிய ஒளியும் மழையின் தூறலும்

வறுமைக் கோட்டை அளந்தபடி

நாளாந்தம் எங்கள் வீட்டுக்குள்

வந்து போகின்றன


இது அவர்களுக்காக போடப்பட்ட

வாசல் கதவுகள் அல்ல

யுத்தம் என்று சொல்லி

நித்தம் வந்து

எம் வாழ்விலும் எமது வீட்டிலும்

பகைவனின் போர் விமானங்கள்

கொத்தணிக் குண்டுகளால் சிதைத்த

விழுப் புண்கள்

 

மாற்றுக் கூரை போடுவதற்கு

வருமானம் போதவில்லை

குடும்பத் தலைவனும்

குண்டடிபட்டு போய்விட்டான்

குடும்ப எண்ணிக்கையில்

மாண்டவர் பாதி

எஞ்சியவர் மீதி

 

இளமை அழிந்தும் முதுமையோடு

புதுச் சட்டைகள் தைத்துத் தைத்து

ஓடிக்கொண்டே இருக்கின்றேன் 

திண்ணையில்

 

ஓடிய தூரம் தெரியவில்லை

தேசங்கள் கடந்து ஓடியிருப்பேன்

தணியாத் தாகம் எனக்கும் உண்டு

அவ்வப் போது ஓயில் சிந்தி

என் நாவை நனைத்து விடுவாள்

பாவம் தேனீரும் அருந்தாள்

என் தோழி

 

வேதனை விழிம்பில் விம்மிச் சினந்து

பொவின் நூல்கள் சிக்கித் தடுமாற

உள்ளம் நொந்து

ஊசியும் உடைந்துவிடும்

 

தன் பசி அடக்கி

மாற்றூசி வாங்கிவிடுவாள் தோழி

யார் யாருக்கோ எல்லாம்

சட்டை தைக்கும் நான்

என் தோழிக்காக ஒரு புதுச் சட்டை

தைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம்

எனக்குள்ளே

ஆனால் இயலவில்லை

குடும்ப ஏழ்மை என் தோழியை

துரத்திக் கொண்டே இருக்கிறது

 

ஒட்டுப் போட்ட சட்டைகளையாவது

இடை இடையே கந்தல் இன்றி

தைத்துக் கொடுக்கும் மகிழ்வோடு

என் தோழியின் கால்களை

முத்தம் இடுகின்றேன்

பயணம் முடியவில்லை

இப்படிக்கு – உஷா

 

பாவலர் வல்வை சுயேன்

mercredi 30 septembre 2020

நியமா நிழலா !!!


உன்னை காணவில்லையே என்று

கடவிளிடம் முறையிட்டேன்

கடுகதியில் வந்துவிட்டாய்

இறைவனின் மகளா நீ


பொய்கள் விளைந்திருக்கும் பூமியில்

நியங்களை தேடி ஓடுகின்றேன்

இறுதிவரை காத்திராதே

நான் வருவேன் என


பாவலர் வல்வை சுயேன்

dimanche 21 juin 2020

இல்லை ஒரு பாதுகாப்பு !!!


அள்ளிக் குளித்து ஆடை அணிந்து
அல்லி உதட்டில் செங்காந்தள் தடவி
விழி நீள் ஓரத்தில் அஞ்சனம் தீட்டி
கொண்டை மாலையில் தேன் தளிராட

கூந்தல் மேகம் கூட்டி அணைத்து
கானக் குயிலே நீ கூவாவிடில்
பருவப் பெண்ணையும்
பார்ப்பார் எவரோ
வெள்ளிக் கொலுசொலியில்
சங்கீதம் கேட்டு
பட்டாம் பூச்சியாய் பறக்கிது மனசு

மின்னும் தாரகைகள் கேட்கின்றன
பூமியில் யார் அந்த நிலவென்று
அழகு பாதி ஆடை பாதி
அஞ்சன ஒளியில் புலரும் நிலவே
அடுக்களை தீயில் உருகும் பொம்மை நீ

ஒவ்வொன்றாய் திருடுகிறார்
உன்னிடத்தில் ஏதேதோ
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு

பாவலர் வல்வை சுயேன்

vendredi 19 juin 2020

காவியமா ஓவியமா !!!


தண்ணீர் தண்ணீர் என்று
தாக நிலை பெருக்கெடுத்து
ஜீவன் துடி துடிக்க
தன்னிலை தாண்டா
நூல் வேலிக்குள் நின்று
தந்தையை மகனாக்கி
தாயான மகளே பணிந்தேன்

ஆகாரமோ நீராகாரமோ
கடுகளவேனும் இன்றி
சிறை வதையில்
வீழ்ந்துயிர் போகவே
தண்ணீருக்கும் தடை விதித்தோர்
தம் நிலை இழந்து கூன் னுருக
ஆனந்தக் கண்ணீர் சிந்தின
சிறைக் கம்பிகள்

புரட்சியாளனின் எழுச்சி மகளே
புடம் போட்ட தங்கமே
ஆடக்கு முறையாளரும்
கரைத்திட முடியாத
காவிய ஓவியம் நீ

பாவலர் வல்வை சுயேன்

jeudi 18 juin 2020

கொரோனா கோழி !!!


 கூவுது கூவுது சேவல் கூவுது
கொரோனா கோழி கொக்கரித்தே கூடுது
முகம் அறியா முகநூல் அரங்கே
முழுதும் நனையுதப்பா
தடம் அறியா புயலும் வீழ்ந்து
சாமிக்கும் சேதம் அப்பா

வேரடி மண்ணுக்கு நீர் ஊற்று
வேண்டாம் விழலுக்கு கூப்பாடு
முந்தானை இல்லா முயல் முகத்தில்
வழிந்தே ஏங்கிது வலைக் கூடு

கொரோனா கோழியே குங்கும உதட்டில்
கொல்லாமை தவிர்ப் பேது
இதில் இல்லாமை நிலை ஏது
மானே வா.... மயிலே வா…..
மானத்தை இழந்து வீதியில் நிற்றல்
யாருக்கும் உதவாது

கண்ணே மாறியதேன் வேழமும் வீழுதிங்கே
இழை நூல் வேலியும் இடை அகற்றி
காசுக்காக உன்னை இழக்கின்றாய்
மானச் சேலை மறந்தே போச்சோ
அதற்கொரு விலை உரைக்கின்றாய்

அல்லாடும் மனசே நெறி ஊற்றில் நீந்தாயோ
உன்மான உயர்வுக்கு தணல் கூட்டை தணியாயோ
பொன்மானே பெண் மானே போனது போகட்டும்
நல வாழ்வில் நாணமுறு நலிந்தேகும் புயல் காற்று
கற்றோரும் இங்கில்லை கல்லாரும் இங்கில்லை
கரை ஏறா காமத்தில் கண் இருந்தே குருடானார்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 17 juin 2020

ஆண்டவன் தரிசனம் எதற்காக !!!

விண்ணைத் தொடுவது இனியது
மண்ணின் காதல் வலியது
என்னுயிர் இன்றி போனாலும்
தமிழினம் வாழ
தனி நாடு
இப்புவிதனிலே இல்லை என்றால்
உன்னை நினைந்தேன் இன்னும் வழிபாடு

ஆலய மணிகள் எதற்காக
ஆண்டவன் தரிசனம் எதற்காக

மதங்களாலே மதங்கள் ஏறி
இனச்சுத்தி வதையில்
உயிர்களை கொய்கின்றார்
அடியவர் இல்லா இடந்தனிலே
இறைவா கோயில் நிலைக்காது

நின் நிழல் திருவடி நின்றாறி
தமிழினம் வாழ வாழ்வு கொடு
கோன் உயர் கொடி உயர்ந்திங்கு
குலம் தழைப்போம் குலச் சாமி

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...