vendredi 17 mai 2019

அணையா தீ மே,18


உறவே உறவே எமதுயிர் உறவே - உங்களின்
நினைவேந்தி வணங்குகிறோம் மே-18
டைகள் வரினும் தணியோம்
உறங்காத விழிகளில் நெருப்பு

ஆழ் கடல் சூழ் மாங்கனித் தீவின்
ஏகாந்தமே எமது தாலாட்டு 
ஆலின் நிழலிலும் விழுதின் உறவிலும்
அன்பு விதை ஊன்றி உயர்ந்திருந்தோம்
தமிழீழமே எமது தாய் நாடு

அரசாள் கதிரை அமர்ந்துறும் ஆதிக்க வெறியரே
லெட்சோப லெட்சம் இன்னுயிர்களை இழந்தோம்
ஈகமும் மோகமும் இனச் சுத்தி வன்மமும்
ஏன்தானோ?

வெந்தணல் வீழ்ந்து வேகுதடா இன்னும் தமிழர் குலம்
விழி நீரே கடலாக விடிவின்றி விழிகளை இருள் மூட
மனு நீதி காப்பார் இல்லை
மாண்டோர்க்கும் நீதி இல்லை
குருதி அலை கொதித் தெழுந்து
கரை தொட்டுத் திரும்புதே
புலராதோ சுதந்திரம் என்று

கொத்துக் கொத்தாய் கொத்தணிக் குண்டுகள்
கொட்டும் மழையென கிளசர் குண்டுகள்
விண்ணேறி வந்தே எங்கள் வாசல் எங்கும்
கொட்டி எரித்தீர் எமது உயிர்களை பறித்தே
வாழப் பிறந்தோர் வாழ்வினை இழந்தோம்
கொத்துக் கொத்தாகவே மாழ்ந்து மடிந்தோம்

உயிர் பிரிந்த அன்னை உடல் மண் சாய்ந்திருக்க
மரணம் அறிவாளோ பச்சிளம் பாலகி
பசிக் கொடும் துயரில்
அன்னை முலை அதரம் பற்றி
பிணம்தனில் பால் குடித்துத் துடித்தாள்
உயிர் அற்ற கூடானோம் முள்ளியிலே

அம்மா அம்மா என்றழும் குழந்தைகள் 
ஐயோ என்று அழும் முன்னே
நச்சுக் குண்டுகளாலே அவர் உயிர் பறித்தீர்

குன்றுங் குளியாய் குதறிய வன்னியிலே
மண்ணுலகை காண வந்த சிசுக்கள்
தொப்புள் கொடியோடு
சிதைந்து சிதறி வீழ்ந்தும் இரங்கலையே

குருதி ஆற்றிலே குற் றுயிர் கூட்டிலே
உற்ற துணைக்கும் யாரும் இல்லை
எம்மை, கற் தூணில் கட்டி
கடலில் விட்டீரே
நாற் புறமும் உயிர் குடித்தன துப்பாக்கிகள்
நிமிர்ந்து நடந்தோரின் தலை இல்லை
நாலு காலில் நடந்தோம்
கால் இழந்தோர் கை இழந்தோர்
அபயம் அபயம் என உதவிக்கு அழைத்தார்
யாரை யார் காத்திடுவோம்
உறவுகளின் பிணங்களில் தடுக்கி வீழ்ந்துறுண்டே
இன்னுயிரை கை பிடித்து முள்ளியிலே நகர்ந்தோம்

உயர் காப்பு வலையம் என்றே அழைத்தீர்
மாத்தளனில் வஞ்சக வலை வீழ்ந்தோமே
மௌனித்தது ஆயுதம்தான்
மௌனித் தறியோம் மானம் 
எமை கொன்றழித்தீர் தின்றழித்தீர்
பிணந்தனிலும் வன்புணர்வு புனைந்தீர்

அன்பே இறைஞானம் என்றான் புத்த பகவான்
அன்பை கொன்றே ஆயுத பூசை செய்துவிட்டீர்
பகவானின் தங்கப் பல்லிலும்

தமிழரின் இரெத்தம்

சாட்சிகள் உருக் குலைந்து போகலாம்
அகிலத்தின் அன்புச் சாட்சி உறங்காதென்றே
தட்டுகிறோம் தட்டுகிறோம் பத்தாண்டு களிந்தாலும்
ஐ நா மன்றின் மனக் கதவுகளை தட்டுகிறோம் 

வென்றாண்ட தமிழீழம் துவண்டுருகி கிடந்தாலும்
மாண்ட தென்று மருளாது நெஞ்சு
ஆறாது ஆறாது அந்த நந்திக் கடலும்
ஓயாத அலையாய் எழுவோம் எழுவோம்
விடியாத இரவேது விடியலுக்கு ஒளி உண்டு

பாவலர் வல்வை சுயேன்
May . 18 . (2019) 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...