dimanche 13 décembre 2015

மோன மலர் நீ ....



மோன மலரே அன்பை அள்ளி இடும் அச்சயம் நீ
மண்ணில் உன்னை கண்ட விண் தாரகை ஒன்று
விழி அசைவால் ஓரம் கட்டி ஒளிக்கரம் நீட்டுதடி ....
உன் ஆழ்கடல் மோனத்தின் உச்ச நிலை நான் அறிவேன்
மோனத்தின் அமைதி தெளிவு முக்தி நிலை கொண்டவள் நீ
யாலம் செய்யும் வானவில்லும்  வந்துன்னை கொஞ்சுதடி
ஏழு நிறங்களில் அது எதைத் தேடுகிறதோ உன்னில்
ஏதென்பேன் நான் .....
செந்தூர மஞ்சள் குழித்த உன் செவ்வான விழி குளிர்ந்திருக்க
ஆத்மீக அறிவொளி உனதன்பை அள்ளி அள்ளி கொட்டுதடி
இகபர சுகத்தின் அச்ச நிலை அகன் றழித்து
கள்ள நகை இன்றி கனிவோடு பகிர்கிறாய்
இறைத் திரு முடிக் கங்கையின் தங்கை நீயடி
அமுத சுரபி இல்லையேல் அன்றாடம் இங்கே
போகும் ஜீவன் யார் அறிவார் ....
இன்முகத் தென்றலே இரும்பறை வாழ்வோர்க்கும்
அருமறை மருந்து நீ
கொள்ளி இட்டோர்க்கும் அள்ளி இடும் அச்சயம் நீ
ஆண்டவன் திருவடி அதோ உனக்காக ....
Kavignar Valvai Suyen

jeudi 10 décembre 2015

ஓர விழிப் பார்வையிலே ஓவியம் சிரிக்கிறது ....

உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
இவ்வுலகின் நாயகன் நாயகி நீயும் தான்
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்...
வாழ் நாள் இருப்பில் வாசனை உண்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்...
வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்தே
ஓர விழிப் பார்வையில் ஓவியம் சிரிக்கிறது
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்
உன்னைச்  சுற்றி விரிக்கப் பட்டுருக்கிறது
சிலந்தி வலையாய் சித்திரக் கோடுகள்
காணும் வரைதான் கனவுலகம் நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும் கடல் நடுவே காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு தேவை இல்லை
சாமிக்கும் சொல்லிவிடு அனைத்தும் இங்கே நிர்வாணங்களே...
Kavignar Valvai Suyen

jeudi 3 décembre 2015

நந்தவனப் பந்தலிலே மாறாப்பு ....



பூ மேனி பூத்திருக்க பூ கொய்து போனவனே
செம் பவளம் சிரிக்குதடா செங்கோல் மன்னா
எத்தனை முறை நீ கொய்தாலும்
நந்தவனப்  பந்தலிலே மாறாப்பு சிக்குதடா
நூலாடை விடை கேட்டு வீழும் முன்னே
நீரோடை ஒன்று நதி ஆனது உன்னால்
போராடும் மனசு போர்க் களத்தில் புரவியிலே
வீழ்ந்தாலும் நான் விழுப்புற்றே வீழ்வேன்
கள முனையில் காத்திருக்கேன்
எனை வெல்ல என்று நீ வருவாய்
எத்தனை முறை நீ பூக்களை கொய்தாலும்
வெற்றி நிச்சயம் எனக்கே எனக்குத் தான்....
Kavignar Valvai Suyen

mercredi 2 décembre 2015

தாலாட்ட வருவாயா தாயே என் தாயே...



இருள் வந்து இமை மூட விழி உறங்கலையே தாயே
தாயே என் தாயே நீ இன்றி என் விழி உறங்கலையே
மன ஓடம் நதியினிலே இரு கரையும் தீ யினிலே
ஓடம் ஓடும் என்றே நான் இருந்தேன்
ஓடவில்லை மூழ்குதம்மா….
நாற் புறமும் நீசர் நிலை நான் உறங்க அமைதி இல்லை
தாலாட்ட வருவாயா தாயே என் தாயே
அடித்தவரை சொல்லி அழுகிறேன் அணைத்திடத்தான் நீ இல்லை
எவர் என்னை அடித்தாலும் அவரை நீ அடித்திடுவாய்
அவர் அழுது நீர் மல்க நான் மகிழ்ந்து உறங்கிடுவேன்
தூயவளே என் தாயே எனக்காக உறவை அடிக்கும் உத்தமியே
உன்போல் யாரம்மா நீயே என் கோயிலம்மா

அந்த நாள் அவ்வேளை என் பெயரே நான் அறியேன்
அடித்தாரின் பெயர் சொல்ல ஞானசம்பந்தனாய் நானும் இல்லை
அப்பன் அடித்திருந்தால் அல்லித் தண்டால் அடித்திடுவாய்
அம்மான் அடித்திருந்தால் அலரித் தடியால் அடித்திடுவாய்
எத்தனை எத்தனை அடிகள் அத்தனையும் அன்பு மழை வரிகள்
தாலாட்டின் இனிமை கேட்டு உன் மடியில் உறவறிந்தேன்       
இன் நாளில் நீ இல்லை நான் உறங்க உன் மடி இல்லை
அணைத்தவரே அடித்துவிட்டார் அன்பு செய்ய யாரும் இல்லை
அத்தனை ஜீவனையும் நீயே அடித்துவிடு மனசாறி நான் மகிழ்ந்து
இமை மூடி  உறங்கிடுவேன்
தென்னை இளங்கீற்றில் தென்றலுக்கும் சொந்தம் இல்லை 
அன்னை நீ இன்றி ஆனந்தம் எனக்கில்லை
இருள் வந்து இமை மூட விழி உறங்கி நாளாச்சே
அம்மா என் தாயே என் விழி உறங்கி நாளாச்சே
தாலாட்ட வருவாயா தாயே என் தாயே.......     
Kavignar Valvai Suyen 

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...