ஞாயிறு, 10 மே, 2015

முள்ளி வாய்க்கால் முடிவல்ல....


அபயம் அபயம் என்ற அபலக் குரல்
இலங்கா புரியில்  கேட்டு
விண் மேகங்களும் வியர்த்தன...
முள்ளிக் கடலெங்கும் செங்குருதியின் சங்கமம்
உலகத் தமிழனின் உயிர்த் துடிப்புக்கள்
உணர்வலையாய் எழுந்து
உலக விழிகளை தட்டியது
தட்டியும் திறக்கப்படவில்லை
ஐநா மன்றின் கதவுகளும்!
திறந்த வெளிச் சிறையில் ஈடேறும்
இனச் சுத்திக் கொலைகளை
விண்ணின்று விழிக்குள் பிடித்த பிரதிகளையும்
புடம்போட்டு வடம் இழுக்க மறுத்துவிட்டனர்
 
ஊர் இழந்தோம் உறவிழந்தோம் ஏதும் இல்லை
ஏதிலியாய் எங்கும் ஓடினோம் ஓடினோம்
உறவுகளின் பிணங்களே மிதிபட்டன
துடித்தோம் துவண்டோம்
துணைக்கரம் கொடுத்திட இயலவில்லை
எங்கே செல்கிறோம் ஏதும் அறியோம்
எங்கோ போகிறோம்                  
சுய உரிமை சுய ஆட்ச்சி
தந்த சுதந்திரம் எங்கே
முழு நிலவாய் ஒளி முகம் தந்த
தமிழீழம் எங்கே
தொலைத்து விட்டோமா
இல்லை அதை தொடுவதற்கு
இன்னும் தொலைவிருக்கிறதா
 
எண்ணற்ற உயிர்களை கொடுத்துவிட்டோமே            
எதை கொடுப்போம் இன்னும் நாம்
எம்மவனும் எட்டி மிதிக்கிறான் எம்மை
இடறி வீழ்ந்துவிட்டோம் ஏமாற்றங்களே மிஞ்சின!
புதைந்த கால்களை பற்றிப் பிடிக்கும்
சேற்று நிலங்களும்
சிதைந்த பிணங்களில் எழும் புழுத்தலில்
சுவாசத்தை புடுங்கும் துர் நாற்றங்களும்  
வீழ்ந்து கிடக்கும் தாய் பிணங்களின்
நிலை அறியா பாலகர்
பசிக்கு பிணத்தின் முலை பற்றி
பாலருந்தும் துயரங்களும்
மானம் எனும் கற்ப்பை
மாற்றான் சூறையாடிச்  சிதைத்திட
சிதைந்த தங்கைகளின் உடலங்களும்
கருவறைக்குள்ளேயே கழுத்தறுக்கப்பட்ட
நாளைய சிசுக்களும்
விண்ணேறிப் பெய்த கொத்தணிக் குண்டுகளால்
குவிந்து கிடக்கின்ற பிணங்களும்
ஓடி வந்த எம்மிடம் ஏதேதோ கேட்டனவே
 
பாழும் உசிருக்கு பாது காப்பு வலயம்
பங்கம் இல்லை என்றுதானே வந்தோம்
இங்குதானே பறிக்கப்பட்டன அராயகத் தீயில்
ஆயிரம் ஆயிரமாய் எம்மவர் உயிர்கள்
அள்ளி அள்ளித் தின்டது அம்மணமாய்
அடக்குமுறை இராணுவங்கள்..
 
எம்மை பார்த்த வானவில் ஒன்று
தொலைவில் வளைந்து நின்றே
ஏதோ கேட்கிறதே
நிமிர்ந்து பார்த்தேன்
குண்டடி பட்டு இறந்த
ஒற்றை பனை மரத்தின்
நெற்றிக் குருதியும் ஓடி
முள்ளிக் கடலில் சங்கமித்திட
சிவந்த மண்ணும் சிவந்த கடலும் சூழ்ந்திட
ஊமையாய் உள்ளுக்குள்ளே எரிமலையாய்                 
கரையும் கண்ணீர்த் திவலைகளோடு
தானைத் தலைவன் அற்ற தமிழீழம்
மானச் சேலை கிழிக்கப்பட்டுக் கிடக்க
சொல்லி அழுகிறோம் விம்மி வெடிக்கிறோம்
அந்திம இருளுக்குள் மீண்டும் தமிழன்
முற் கம்பி வேலிகள் எம்மைச் சுற்றி நின்று சிரிக்கிறது….
Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...