வெள்ளி, 20 அக்டோபர், 2017

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்....

பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 19 அக்டோபர், 2017

முக்தி கொடு பக்தனுக்கு !!!

கொத்தளந்து நீ கொட்டும் உன் முத்தாரச் சிரிப்பில்
முத்து பரல்களை கோவை இதழ் இடை கண்டேன்
பௌர்ண முகத்தில் இரு கரு நிலாக்கள் நின்று
காந்தமாய் என்னை கவர்ந்தீர்க்க
தோகை இமை இரண்டிலும்
கரு மையாய் கலந்து
உன் பூ விழி கலந்தேனடி

என்னை நீ கட்டிக் கொள்ள உன் நெற்றியில்
குட்டி நிலவாய் நான் ஒட்டிக்கொள்ள
வண்ண மலர்களும் உன் கேசம் தழுவி                
வாசம் வீசின….
அம்பறாத்துணியில் அம்புகளேதும் இல்லை
உன் புருவ வில் இரண்டிலும்
அன்பெனும் அம்பேற்றி
ஏன் கொன்றாய் என்னை ?
உயிர் உன்னோடுதான் வாழ்கிறேன் இன்னும்
சக்தி உமையானவளே முக்தி கொடு உன் பக்தனுக்கு


பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 13 அக்டோபர், 2017

உப்புக் கடலே என்னை நீ அறிவாய்...

துயர்மிகு துவட்டா இரவே விலகாதே
விழிகளிலே கங்கையின் ஓடை
நான்காம் சாம மணி ஓசை கேட்கிறது
ஊர் கோவிலில் பாலாபிஷேகம்
கற் சிலைக்கு !
முதிர் கன்னியரின் விழி ஓடை கானல் நீரே….


பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 12 அக்டோபர், 2017

கரிச் சட்டி பொட்டு !!!

மனசுக்குள் கொஞ்சுதே வளை ஓசை
உயிர் இல்லா மாளிகையில்
ஒற்றைக் கிளி ஊமையானேன்

மஞ்சள் பூசி மருதாணி இட்ட அழகில்
கண் பட்டுடுமே என
கன்னத்தில்,
நீ தொட்ட இடம் தேடுதடா
உன் கண் பட்ட இடம் வாட்டுதடா

ஊரார் சொல்லும் வார்த்தைகளை
நெரிஞ்சியென தைக்கவிட்டு 
முகவுரை அழித்து முடிவுரை தந்தாயோ
அமங்கலி எங்கிறார் என்னை, இது நியம்தானா.....


பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 9 அக்டோபர், 2017

கருவேப்பிலை...

காதலெனும் மரம் ஏறி கருவேப்பிலை பறித்து வந்தேன்
மின்சார அடுப்பேற்றி தாளிதச் சட்டி வைத்துவிட்டாய்
வெண்ணையாய் நான் உருக எல்லாமாய் நீ இருந்து
கடுகோடு கருவேப்பிலையும் சேர்த்துவிட்டாய்
வாசனை அழைக்கிதடி வா வா என்று
ஆக்கி வைச்ச கறி ஆறும் முன்னே
அள்ளிப் போடடி எந்தன் கண்ணே...

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிவேனா மாலை....

கேட்டு வாங்கிவேனா மாலை கொடுத்து சிவந்தன எங்கள் கைகள்
மாலையும் மலர் சென்டும் கோவிலுக்கும் கட்டும் வித்தகர்களே நாம்
பதினாறில் ஆண்ட மாலை அறுபதிலும் தினம் ஆளும் அரசன் இவன்
காயம் செய்யாதீர், நீவிர் செய்யும் மாயம் அறிவோம்
மாய மான்களை தோற்றுவித்து
தூய பணியினை கொல்லாதீர்.....

ஐந்து ரூபாய் தலைமை ஆடும் அகங்காரத்தில்
முன் துணை தூண்களும் வீழ்ந்திட
வயது பத்தினை தொட்ட பிள்ளையின்
நிதியில் நோய்மை ஒற்றுமை கட்டில் விரிசல்
அன்புக் கென்றும் அடைக்கும் தாழ் போட்டறியோம்
அணைத்த கையினை முறிக்க எண்ணாதீர்
அபயம் என்ற குரல் யாருக்கும் அழகல்ல
இக் குழந்தையின் தாயுமானவன்


பாவலர் வல்வை சுயேன்

தீபங்கள் ஒளி இழந்தால்...

மீட்டாத வீணையே வா... வா... மீட்டும் விரல் அழைக்கிறது
சுதியும் லயமும் உன் இதயம் சுரங்கள் ஏழும் உன் சுவாசம்
வாழ்விழந்த மலரென்று மாலை சேரா மலருண்டோ
மூலி என்ற வேலிக்குள் இதயச் சரங்கள் வாடுவதோ
தீபங்கள் ஒளி இழந்தால் தெய்வங்களும் உறங்காது
தாபங்கள் தணியாதெனில் சந்ததியும் வாழாது
வசந்த காலக் குயிலே நீயும் இசைந்து பாடு இனிய ராகம்
வாழ்ந்தே உதிர்வோம் வாடா மலரே வா... வா...
உதிர்காலம் எதுவென முதுமையே முடிவுரை எழுதும்


பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்