சனி, 30 மே, 2015

மரத்தில் மீண்டும் ஏறிவிடு ...


இதயம் இருக்கிறது இடப்புற நெஞ்சில்
உயிரின் சுவாசமே அதுதானே
மதம் எனும் பெயரால்
மனிதனை மனிதன் தின்பது
கொடிதே!
இதயம் இல்லாதவனை
இறைவன் இரட்சிப்பதில்லை
மரம் விட்டு இறங்கிய மனிதா
மதத்தில் நீ ஏறிவிட்டாய்
மானுடா உன்னால் மானுடர் அழிவு நிகழ்கிறது
மரத்தில் மீண்டும் ஏறிவிடு தூய்மை கொள்வாய்...
Kavignar Valvai Suyen

செவ்வாய், 26 மே, 2015

என் மேனி உனக்கே சொந்தம்..


உன்னை நான் எழுத என்னை நீ எழுத
முப்பாட்டன் கட்டிய சுண்ணாம்பு வீடு
புனருத் தானம் பெற்று இதய வாசல் திறந்தது!
என்னை,
பருவ மழை தொடுகிறது
பூங் காற்று தழுவுகின்றது
என்னவனே,
விழியால் விழி அணைத்து
விழிக்குள் என்னை மூடு
யாரும் தொடார் என்னை
சூடான மேனி,
தன் வெப்பம் தணிக்கட்டும்
என் மேனி உனக்கே சொந்தம்..
Kavignar Valvai Suyen

புதன், 20 மே, 2015

முகாரி முத்தம் ...


வலிகளைச் சுமந்து வளைந்துவிட்டோம்
முகாரி முத்தமே எங்கள் முத்தம் எங்கும்
அடுப்பில் வைத்த விறகுக்குத் தெரியும்
உலை வைக்கவில்லை ஊருக்கும் தெரியாது
ஆறு நாட்களாய் அது அப்படியே கிடக்கின்றது
இராகங்களின் ஈர்ப்பு காலத்தால் அழிவதில்லை
புதிய வார்ப்புக்களில் நாம் புன்னகை சொய்தாலும்
ஏழை குடிலை கோபுர நிழலும் தொடவில்லை
கருணைக் கெலை கேக்கிறது தாய் விறகு!
தீக்குச்சியிடம்!
Kavignar Valvai Suyen

செவ்வாய், 19 மே, 2015

விருந்துக்குண்டு மேனிப் பழம் ...


வேடிக்கை அல்ல இதுவே வாடிக்கை
விருந்துக்குண்டு மேனிப் பழம்
வசதிக் கேற்ப படிநிலையில்
அட்சய பாத்திரமோ இவள்
அள்ளித் தருகிறாள் ஆரணங்கு !
 
கணைகள் எடுத்து கண்கள் எய்திட
பனித் துகிலாடை கலிங்கச் சிலையில்
விடிந்தாலும் விருந்துண்டு
நாண முகத்தில் முக்காடு
நாண வைக்கிதே பூக்காடு 
சாலை வீதியில்  விலைமாதின் சேலை
சொல்லாத சோகம் சொல்லி
கண்ணீர் வடிக்கிறது...
Kavignar Valvai Suyen

சனி, 16 மே, 2015

கற்பும் கருவறையும்...


தொலைந்து போ என்றுதானே சொன்னேன்
அருகில் வந்து அன்பு முத்தம் தந்தது
அந்த அமுத நிலவு...
நெஞ்சம் நிறைத்துக் கொட்டிய வலியில்
கண்களிலே நீரின் தேக்கம்
ஒவ்வொரு துளிகளிலும் ஓராயிரம் அர்த்தங்கள்
ஒவ்வொன்றாய் தெரிவு செய்தேன்
எதையுமே பிரித்துப் பார்க்க முடியவில்லை
மனசு வெள்ளை மனசுக்குள் கள்ளம் இல்லை
வாழ்க்கைக் கோலத்தில் வண்ணம் சிதைந்தேனா
தீர்க்கப்படா வரவை தந்து தீய்கின்றது
கற்பும் கருவறையும்,
காரணங்கள் கரையவில்லை!
பத்தவைத்து பிய்த்துப் போனவன் எங்கே
தீய்ந்து எரிகின்றன பெண்களெனும் பொம்மைகளே..
Kavignar Valvai Suyen

வெள்ளி, 15 மே, 2015

வாய்மையின் அழகு...


அழகே அழகு அமுத மழை பொழியும்
அழகுத் தமிழ் அழகு...
இசை யெனும் பூபாளக் குயிலின்
இளம் காலை அழகு
அள்ளி அனலிட்டு அந்திவரை சுட்டாலும்
அல்லியின் காதலன் அந்த ஆதவனும் அழகு
அண்ட சராசரமும் அழகு.. இயற்கையும் அழகு..
இதை எல்லாம் வென்றாய் என் மகளே..
 நீ பேசும் வாய்மொழியே.. வாய்மையின் அழகு...
Kavignar Valvai Suyen

திங்கள், 11 மே, 2015

மகளிர் மட்டும் ....


மகளிர் மட்டும் என் மடியில்
நான் பேசுவதில்லை !
துள்ளி விழும் போதில்
நொந்து அழுவேன்
தரிப்பிடம் தனில் மட்டுமே
தணிப்புறுவேன் சினம் தனை...
 
சாரதியின் ஆணையில் துணுக்குற்று விழித்தேன்
முன் அமர்வினை முல்லைக்குக் கொடு என்றார்
ஏறியவள் அழகிதான்
என்றோ பாத்திருக்கிறேன்
இன்று பூத்திருக்கிறாள்...
விழியெனும் வண்டுகள் மனசெனும் இறகால்
தொடாமலே தொட்டன இந்தப் புது மலரை
தொடாத பாகங்களால் என்னைத் தொட்டு
அமர்ந்தாள் அந்த வண்ண மலர்
நொந்த என் மனசுக்கு
ஓராயிரம் முத்தங்கள் குவிந்தன
இரும் பென்றாலும் இதயம் உள்ளவன் நான்
தொட்டவளை கற்புக்கரசியாகவே
அவளின் தரிப்பிடத்தில் விட்டுச் செல்கிறேன்...
Kavignar Valvai Suyen

ஞாயிறு மாலையின் சில மணித்துளிகள்...


 
ஆற்று வெள்ள மிகையினால்
விடுமுறைக் கால வீடுகள்
நீரில் படகாய் எங்களூரில்
ஞாயிறு மாலையின்
சில மணித்துளிகள்...

ஞாயிறு, 10 மே, 2015

முள்ளி வாய்க்கால் முடிவல்ல....


அபயம் அபயம் என்ற அபலக் குரல்
இலங்கா புரியில்  கேட்டு
விண் மேகங்களும் வியர்த்தன...
முள்ளிக் கடலெங்கும் செங்குருதியின் சங்கமம்
உலகத் தமிழனின் உயிர்த் துடிப்புக்கள்
உணர்வலையாய் எழுந்து
உலக விழிகளை தட்டியது
தட்டியும் திறக்கப்படவில்லை
ஐநா மன்றின் கதவுகளும்!
திறந்த வெளிச் சிறையில் ஈடேறும்
இனச் சுத்திக் கொலைகளை
விண்ணின்று விழிக்குள் பிடித்த பிரதிகளையும்
புடம்போட்டு வடம் இழுக்க மறுத்துவிட்டனர்
 
ஊர் இழந்தோம் உறவிழந்தோம் ஏதும் இல்லை
ஏதிலியாய் எங்கும் ஓடினோம் ஓடினோம்
உறவுகளின் பிணங்களே மிதிபட்டன
துடித்தோம் துவண்டோம்
துணைக்கரம் கொடுத்திட இயலவில்லை
எங்கே செல்கிறோம் ஏதும் அறியோம்
எங்கோ போகிறோம்                  
சுய உரிமை சுய ஆட்ச்சி
தந்த சுதந்திரம் எங்கே
முழு நிலவாய் ஒளி முகம் தந்த
தமிழீழம் எங்கே
தொலைத்து விட்டோமா
இல்லை அதை தொடுவதற்கு
இன்னும் தொலைவிருக்கிறதா
 
எண்ணற்ற உயிர்களை கொடுத்துவிட்டோமே            
எதை கொடுப்போம் இன்னும் நாம்
எம்மவனும் எட்டி மிதிக்கிறான் எம்மை
இடறி வீழ்ந்துவிட்டோம் ஏமாற்றங்களே மிஞ்சின!
புதைந்த கால்களை பற்றிப் பிடிக்கும்
சேற்று நிலங்களும்
சிதைந்த பிணங்களில் எழும் புழுத்தலில்
சுவாசத்தை புடுங்கும் துர் நாற்றங்களும்  
வீழ்ந்து கிடக்கும் தாய் பிணங்களின்
நிலை அறியா பாலகர்
பசிக்கு பிணத்தின் முலை பற்றி
பாலருந்தும் துயரங்களும்
மானம் எனும் கற்ப்பை
மாற்றான் சூறையாடிச்  சிதைத்திட
சிதைந்த தங்கைகளின் உடலங்களும்
கருவறைக்குள்ளேயே கழுத்தறுக்கப்பட்ட
நாளைய சிசுக்களும்
விண்ணேறிப் பெய்த கொத்தணிக் குண்டுகளால்
குவிந்து கிடக்கின்ற பிணங்களும்
ஓடி வந்த எம்மிடம் ஏதேதோ கேட்டனவே
 
பாழும் உசிருக்கு பாது காப்பு வலயம்
பங்கம் இல்லை என்றுதானே வந்தோம்
இங்குதானே பறிக்கப்பட்டன அராயகத் தீயில்
ஆயிரம் ஆயிரமாய் எம்மவர் உயிர்கள்
அள்ளி அள்ளித் தின்டது அம்மணமாய்
அடக்குமுறை இராணுவங்கள்..
 
எம்மை பார்த்த வானவில் ஒன்று
தொலைவில் வளைந்து நின்றே
ஏதோ கேட்கிறதே
நிமிர்ந்து பார்த்தேன்
குண்டடி பட்டு இறந்த
ஒற்றை பனை மரத்தின்
நெற்றிக் குருதியும் ஓடி
முள்ளிக் கடலில் சங்கமித்திட
சிவந்த மண்ணும் சிவந்த கடலும் சூழ்ந்திட
ஊமையாய் உள்ளுக்குள்ளே எரிமலையாய்                 
கரையும் கண்ணீர்த் திவலைகளோடு
தானைத் தலைவன் அற்ற தமிழீழம்
மானச் சேலை கிழிக்கப்பட்டுக் கிடக்க
சொல்லி அழுகிறோம் விம்மி வெடிக்கிறோம்
அந்திம இருளுக்குள் மீண்டும் தமிழன்
முற் கம்பி வேலிகள் எம்மைச் சுற்றி நின்று சிரிக்கிறது….
Kavignar Valvai Suyen

வெள்ளி, 8 மே, 2015

மண்ணுக்கே சொந்தம் மேனி...


இல்லை என்ற குறை நிலுவையில்
துலா பாரம் கொள்ளும் மனமே
எதிர் பார்ப்புகளில்
ஏன் ஏங்குகிறாய்
அமுத மழை நனைந்தாடும்  
அவன் கூடும்       
இறப்பெனும் களித்தலில்
இல்லா தொழியும் நாளை
நீள நினைந்தடி தொழுதாலும்
மாறாக் காதலும் மறையும்
மண்ணுக்கே சொந்தம் மேனி...
Kavignar Valvai Suyen

ஞாயிறு, 3 மே, 2015

அன்னையின் இந்திரவிழா....வல்வை ஸ்ரீமுத்துமாரியின் இந்திரவிழா
ஊரணி முதல் ஊரிக்காடுவரை
இந்திர லோகம் பூமிக்கு வந்ததுபோல்
மின் நட்சத்திரங்கள்  கூடி
வல்வை எங்கும் வந்திறங்கி
வண்ணம் மிளிற
வருவாளே அருள்வாளே
எங்கள் முத்துமாரி அம்மா
காணக் கண்கோடி வேண்டும்
அன்னையின் இந்திரவிழா....
 
ஆயிரம் கண்ணுடையாள் அகோரமாரி
வல்வை முத்துமாரியின் தீர்த்தத் திருவிழா
திங்கள் மாலை ,மறுநாள் அதிகாலைவரை....

சனி, 2 மே, 2015

இறப்போடு அழிவதில்லை ஆத்மா...


நிலை மாறும் வாழ்வில் நிலையான கனவில்
அலை பாயும் மனிதா ஆகாசம் அழிவதில்லை
இறை அன்பிற்கேது கட்டுப்பாடு
அவன் நினைவின்றி உதிராது உடல்கூடு
பிறை கொண்ட பெருமானே
உனை ஆழுகிறான்
அருள் வேண்டு அவன் அருளாலே
அவன் தாழ் நிழல் உனக்குண்டு
இறப்போடு அழிவதில்லை ஆத்மா
மீழ் பிறப்போடு உன்னையே ஆழ்கிறது...
Kavignar Valvai Suyen

வெள்ளி, 1 மே, 2015

விடியா இரவில் மே ஒன்று...


விடியா இரவில் வீழ்ந்தாய் ஈழமே- உன்
அழ கிழந்து அங்கம் சிவந்த தேனோ
சிந்தை குளிர்ந்திட
நீ சீவி முடிப்ப தெப்போ...
 
கந்தகம் சுமந்து தடைகளும் தகர்த்து
உயிர்த்  தியாக வேழ்வியில்
உயிர் நிறை உற்று
மானச் சேலை கட்டிய
மாறாப் பெங்கே...
உதயம் இன்றி இருண்ட காடாணாய்
கற்களும் முற்களுமே உன் மேனியில்
நெரிஞ்சி வடுக்களால் முள்ளிக் குருதி
அலை அலையாய்  ஓயவில்லை
தண்ணீருக்கே தாகம் இங்கே
தரையில் மீன்களாய் நாங்கள் இங்கே
என்று தணியுமோ தமிழரின் தாகம்
வந்து தழுவுமோ வேங்கையின் காலம்.
Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...