vendredi 19 juillet 2019

நாணல் !!


பொய்யிலே புனைந்த வாழ்வு 
மெய் அன்பிலே நீறாச்சு 
பொய்யும் மெய்யும் புலர்விருக்க
புடம் போட்டே மின்னுகிறது தங்கம்

பாவை என் முகம் பார்த்து
பால் நிலா ஒளிந்திருக்க
பார்த்தவன் மூடன்
பகலில் விளக்கெடுத்து வருகின்றான்

பாலுக்கும் கள்ளுக்கும் பேதம் புரியவில்லை
யாரை நோவேன் யார்க் கெடுத்துரைப்பேன்
நதி வழி சென்றே நாணல் ஆனேன்
பெண்ணுக் கழகு நாணம் என்றே 
பேதமை செய்கின்றார் 
பேதை என் செய்வேன்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 17 juillet 2019

அன்பும் அற நெறியும் !!!


அறிவுக்கு வேலை கொடு - அன்றேல்
அறியாமை உன்னை தின்னும்
அறியாமையின் ஆணிவேர் எங்கே என தேடினேன்
அது நான்தான் என கண்டு வெக்கித்துப் போனேன்

எண்ணக் கருக்கள் என் சிந்தனையில்
எங்கெங்கோ முளைத்திருந்தன
அதை அள்ளிப் பெருக்காது விட்டதினால்
தூர் வாரா நீர் குவளையத்தில் துர் நாற்றம் வீசிட
எத்தனையோ வெடிப்புக்கள் எனக்குள்ளே

மூளைச் சலவை அவசியம் என்கிறார் மருத்துவர்
சொட்டு நீலம் போட்டுத் துவைத்தால்
மின்னல் அடிக்கும் வெண்யாகும் என்கிறார்கள்
அமிலம் நிறைந்த அலம்பலான மூளையை
இனி என்ன போட்டு துவைத் தெடுப்பேன்

ஆயிரம் கோயில் சாமிக்கு இருந்தும்
அவனை நேரில் காணவில்லை
இரங்கல் மனு எழுதிப் போட்டேன், இறைவனுக்கு
இத்தனை காலம் எங்கிருந்தாய் என
எழுதிவிட்டான் என் மனுவுக்கு

மந்திரமான சுந்தரர் நீறெடுத்து
மங்கலக் குங்குமம் சேர்த்து குளைத்து
அமிலம் கொண்ட அங்கம் எல்லாம்
சிந்தை குளிர சிவாய நம என
எழுதினேன்
அபாயம் இனி இல்லை என
ஆட்கொண்டான் இறை என்னை

அறிவும் ஆற்றலும் அரு மருந்தல்ல
அது அள்ளக் குறையா களஞ்சியமே
அற்பணிப்புக்கள் இல்லையேல்
அன்பும் அற நெறியும் உரித்தாவதில்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 12 juillet 2019

கரிக்கின்றது உப்பு !!!


கரைகளை தொட்டுச் செல்லும் அலையே
நீ கடலிடம் சொல்லும் சேதி என்ன
என் மொழி நீ அறிவாய் 
உன் எண்ணம் நான் அறியேன்
வான்மழை தரும் நன்னீர் மேன்மை உற்றும்
மானுடன் சிந்தும் கண்ணீர் கரையை
தொட்டுச் செல்லும் உன்னால் 
உப்புக் கரிக்கிறது கடல்

நேற்றைய காற்றில் வீசப்பட்ட புழுதி நான்
கால சமுத்திரத்தை கடந்திட நீந்துகிறேன்
முடியவில்லை என்னால்
கன்னத்தில் வழியும் சங்கமத் துளியில்
பாவலர் வல்வை சுயேன்

mardi 2 juillet 2019

சயன மாளிகை !!!


 அழகே உன்னை எழுதும் மனசை 
இமைகளின் இறகுகள் வென்றதடி
அன்பு முத்திரை பதித்து பகிர்ந்திட
எழுதும் கோல் எழுதிய தென்ன 

சந்தங்கள் எழுந்தன சங்கீதம் கேட்கவில்லை 
சுரங்கள் பிறந்தன புல்லாங்குழல் ஓயவில்லை 
சயன அறை சங்கீதத்தில் 
சாரீர ஊஞ்சலில்
நடு ராத்திரி நகலாச்சு 
புலர்வின் ஒலியில் கதிரவன் எழுந்தாச்சு

முடிந்தது சிவராத்திரி ஒன்றுதானே
நவராத்திரி ஒன்பது இரவுகள்
ஒன்றின் பின் ஒன்றாய் 
கண் சிமிட்டி அழைக்கும் போதில்
இமைகளின் இறகால் மை எடுத்து வா
அழகுச் செல்வம் வரைவோம் அப்போ 
சயன மாளிகை திறக்கும் கதவு

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...