திங்கள், 30 நவம்பர், 2015

காதலா காதலா காதலை களவாடு ....காதலா காதலா காத்திருந்தேன் உன் கனிந்த முகம் காண
காலம் கடந்து கரைந்திட காணாது உன்னை தேடினேன்
காணாத் தூரத்து வான முகில் விலக்கி 
காதல் கிளியே வந்தமர்ந்தாய் என் அருகே
காதலா காதலா காதலை களவாடு காலம் தாழ்த்தாதே
காத்திருந்து காத்திருந்து பூ விழியும் நோகுதடா
காணா இன்பம் கனிந்து சேர
காயம் ஆறி கானல் தீர
காதலா கனிவு செய்
முத்த மழை பொழிந்துவிடு...
காத்திருப்பின் காலம் எதுவரையோ அதுவரையும்
காயம் செய்யாது வனக் கிளியும் என் விழிகளை....
Kavignar Valvai Suyen

புதன், 25 நவம்பர், 2015

கற்பகத் தருவே சூரியத் தேவா வாழிய நீ ...போற்றுதற்குரிய பொற் கதிரே... கற்பகத் தருவே சூரியத் தேவா ..
தமிழ் இனத்தின் விடியலுக்கே அன்பு ஒளி முகம் தந்த ஆதவன் நீ ..
கிழக்கு வானம் சிவக்கத்தானே அதிகாலை பிறக்கிறது
பிரபாகரா உன் விழி இரண்டும் சிவக்கச் சிவக்கத் தானே
தமிழின மரபுத் தோன்றல் தாய்மண்ணை காதல் கொண்டது
நவ கோல்களில் ஒன்றே ஒன்றுதான் சூரியன்
தரணியில் நீ ஒருவனே தமிழ் மாந்தரின் பிரபாகர பகலவன்

மறக்குலத் தோன்றலே மாவீரா அகவை இன்றுனக்கு அறுபத்தி ஒன்று
ஆதவனே உன் ஒளியே தமிழ் மாந்தரின் தேசியக் கீற்று ....
கண்ணியத்தின் காவலனே  காண்பதற்க் அரிய பேரொளியே
அஞ்ஞாத வாசம் மறந்தறியாய்  வனவாசம் தனிலும்
வரைமுறை வழுவாது எமை ஆண்டாய்
உயிருக்கு உயிர் தந்த உத்தமர் உயிர் நினைந்தே
உபவாசமும் நீ கொள்வாய் ....
விழித் தீயாலே தீபம் ஏற்றி  இடர் எனும் துயர் அகற்றி
விடியலின் தடை கற்கள் அகற்றி தமிழ் குல கடவுளானாவன் நீ

தேசியம் தழைக்க நின்று எமை ஆண்ட தேவனே
உன் தரிசனமே எமது பொற்காலம்
நீ தந்த வெற்றி வாகைகளே தமிழர் நாம் சூடிக் கொண்ட கிரீடம்
புதிய வார்ப்புகளை புரட்சித் தீ எழுச்சியில் வார்த்தவன் நீ
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி
கோயிலில் இல்லாத் தெய்வம் நீ.. தேய் பிறை இல்லா தமிழ் வானம் நீ..
காலத்தை வென்ற கரிகாலனே ஞாலம் எமக்கு ஒரு வாழ்வு தர
உயர் வாழ்வானவனே ....
சூடித் தந்த சுடரோனே சுயம்புவே வாழிய வாழியவே நீ  .....
Kavignar Valvai Suyen

சனி, 21 நவம்பர், 2015

மாவீரர் ...அடிமை கொடு நிலை அறுபட உடைபட - விடுதலை
வேண்டி போர்க்களம் மேவி இன்னுயிர் ஈந்தோரே, மாவீரர்கள்...
இறைவன் முதற்கொண்டு இதிகாசம் முதலாய்
இன்றுவரை இவருக்கு நிகர் எவருமே இல்லை 
தாய் மண் மீட்புப் போரின் மரபுத் தோன்றலே மாவீரர்கள்

கள முனை என்ன பெருங் கடல் எல்லை என்ன
கணைகளை ஏந்தி கணை எதிர் மோதி
வெடியாகி ஒளியாகி விடுதலை கீற்றாகி
கொடியவர் பாசறை எங்கும் விஸ்வரூபத் தீ எழுப்பி
சாவையே சரித்திரமாய் எழுதிய அக்கினிக் குஞ்சுகள் மாவீரர்கள்

பாசக் கொடியிலே பூத்த மலர்கள் இவர்கள்  - சொந்த
பந்த நேசம் எல்லாம் சூழ நெய்தல் என வாழ்ந்தவர்கள்
தாய் நிலம் சிறைபட்டு சிதைந்திடக் கண்டு
தாய் நில விடுதலைக் காதலிலே தாயையும் பிரிந்தார்
இளமைக் கால கனவுகளை இரும்பறை வைத்தார்
உதிரக் காட்டிலே உறவுக் காகவே
விடுதலை மூச்சை சுவாசமாய் உண்டார்
நேச மழை விட்டு நொடிப் பொழுதேனும் காய்ந்ததில்லை
பகைவன் பாசறை எரித்தே தம் உயிர் ஈர்ந்தார் மாவீரர்கள்

அற்றவராய் நுழைந்தவரே தாய் நிலம் பறித்து - கொற்ற
வராய் எழுந்து கொடும் கோண்மை புரிந்திட்ட போதில்
கொடு நிலை களைந்து அடி பணி நிலை அழித்து
சுய நிர்ணயம் உயர்த்தி சுதந்திரக் கொடி தந்தார் மாவீரர்கள்...
இன்று எங்கே தமிழா உன் சுதந்திரம்
இன்று எங்கே தமிழா உன் வாழ்விடம்
காட்டிக் கொடுப்பும் கயமை கரு நாகங்களும்
கூட்டிக் கொடுப்பில் கூதல் துவட்டியதில்
மீண்டும் போனதடா உன் வாழ்விடம்
மீளாச் சிறையில் அல்ல, உன் தாய் நிலம்

அடி பணி நிலை ஏன் தமிழா கொடு நிலை களைந்திட  - நீ
எழு எழு விடியும் முடியும் உன்னாலும், தமிழீழம் படைத்திட
உன் அண்ணன் தானே தேசியத் தலைவன் பிரபாகரன்
தமிழின உயர்வுக்கே பகை உழுது விடுதலை விதை விதைத்து
விருட்சம் தந்தான்.....
தமிழீழ ஆட்சியை தரணியிலே படைத்தான்.....
உருவான தமிழீழம் இல்லாது போவதோ?
தமிழீழக் கனவு கறை ஊற்றில் கரைவதோ?
பாசறை எரித்த மாவீரன் அழைக்கிறான்!
அடிபணி நிலை அறுத்த, மாவீராங்கனை அழைக்கிறாள்!
மாவீரர் முகத்தை பாரடா மண்ணின் மைந்தர் இவரேதானடா...

நவம்பர் மணி ஓசை கேக்கிறதே துயிலும் இல்லங்கள் எங்கேயடா?
உனக் கொரு தாய் நாடு இல்லை எனில் உன் உயிரே ஊனம்தானடா...
கார்த்திகை பூக்களே துயிலுங்கள்
காலம் கனிய வைப்போம் விழி திறவுங்கள்
ஒரு கணம் உமை வணங்கி நிமிர்கின்றோம்
தமிழீழ விடியலை விரைந்தே  மீட்டுடுவோம்... இது உறுதி ...
Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...