வெள்ளி, 20 அக்டோபர், 2017

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்....

பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 19 அக்டோபர், 2017

முக்தி கொடு பக்தனுக்கு !!!

கொத்தளந்து நீ கொட்டும் உன் முத்தாரச் சிரிப்பில்
முத்து பரல்களை கோவை இதழ் இடை கண்டேன்
பௌர்ண முகத்தில் இரு கரு நிலாக்கள் நின்று
காந்தமாய் என்னை கவர்ந்தீர்க்க
தோகை இமை இரண்டிலும்
கரு மையாய் கலந்து
உன் பூ விழி கலந்தேனடி

என்னை நீ கட்டிக் கொள்ள உன் நெற்றியில்
குட்டி நிலவாய் நான் ஒட்டிக்கொள்ள
வண்ண மலர்களும் உன் கேசம் தழுவி                
வாசம் வீசின….
அம்பறாத்துணியில் அம்புகளேதும் இல்லை
உன் புருவ வில் இரண்டிலும்
அன்பெனும் அம்பேற்றி
ஏன் கொன்றாய் என்னை ?
உயிர் உன்னோடுதான் வாழ்கிறேன் இன்னும்
சக்தி உமையானவளே முக்தி கொடு உன் பக்தனுக்கு


பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 13 அக்டோபர், 2017

உப்புக் கடலே என்னை நீ அறிவாய்...

துயர்மிகு துவட்டா இரவே விலகாதே
விழிகளிலே கங்கையின் ஓடை
நான்காம் சாம மணி ஓசை கேட்கிறது
ஊர் கோவிலில் பாலாபிஷேகம்
கற் சிலைக்கு !
முதிர் கன்னியரின் விழி ஓடை கானல் நீரே….


பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 12 அக்டோபர், 2017

கரிச் சட்டி பொட்டு !!!

மனசுக்குள் கொஞ்சுதே வளை ஓசை
உயிர் இல்லா மாளிகையில்
ஒற்றைக் கிளி ஊமையானேன்

மஞ்சள் பூசி மருதாணி இட்ட அழகில்
கண் பட்டுடுமே என
கன்னத்தில்,
நீ தொட்ட இடம் தேடுதடா
உன் கண் பட்ட இடம் வாட்டுதடா

ஊரார் சொல்லும் வார்த்தைகளை
நெரிஞ்சியென தைக்கவிட்டு 
முகவுரை அழித்து முடிவுரை தந்தாயோ
அமங்கலி எங்கிறார் என்னை, இது நியம்தானா.....


பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 9 அக்டோபர், 2017

கருவேப்பிலை...

காதலெனும் மரம் ஏறி கருவேப்பிலை பறித்து வந்தேன்
மின்சார அடுப்பேற்றி தாளிதச் சட்டி வைத்துவிட்டாய்
வெண்ணையாய் நான் உருக எல்லாமாய் நீ இருந்து
கடுகோடு கருவேப்பிலையும் சேர்த்துவிட்டாய்
வாசனை அழைக்கிதடி வா வா என்று
ஆக்கி வைச்ச கறி ஆறும் முன்னே
அள்ளிப் போடடி எந்தன் கண்ணே...

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிவேனா மாலை....

கேட்டு வாங்கிவேனா மாலை கொடுத்து சிவந்தன எங்கள் கைகள்
மாலையும் மலர் சென்டும் கோவிலுக்கும் கட்டும் வித்தகர்களே நாம்
பதினாறில் ஆண்ட மாலை அறுபதிலும் தினம் ஆளும் அரசன் இவன்
காயம் செய்யாதீர், நீவிர் செய்யும் மாயம் அறிவோம்
மாய மான்களை தோற்றுவித்து
தூய பணியினை கொல்லாதீர்.....

ஐந்து ரூபாய் தலைமை ஆடும் அகங்காரத்தில்
முன் துணை தூண்களும் வீழ்ந்திட
வயது பத்தினை தொட்ட பிள்ளையின்
நிதியில் நோய்மை ஒற்றுமை கட்டில் விரிசல்
அன்புக் கென்றும் அடைக்கும் தாழ் போட்டறியோம்
அணைத்த கையினை முறிக்க எண்ணாதீர்
அபயம் என்ற குரல் யாருக்கும் அழகல்ல
இக் குழந்தையின் தாயுமானவன்


பாவலர் வல்வை சுயேன்

தீபங்கள் ஒளி இழந்தால்...

மீட்டாத வீணையே வா... வா... மீட்டும் விரல் அழைக்கிறது
சுதியும் லயமும் உன் இதயம் சுரங்கள் ஏழும் உன் சுவாசம்
வாழ்விழந்த மலரென்று மாலை சேரா மலருண்டோ
மூலி என்ற வேலிக்குள் இதயச் சரங்கள் வாடுவதோ
தீபங்கள் ஒளி இழந்தால் தெய்வங்களும் உறங்காது
தாபங்கள் தணியாதெனில் சந்ததியும் வாழாது
வசந்த காலக் குயிலே நீயும் இசைந்து பாடு இனிய ராகம்
வாழ்ந்தே உதிர்வோம் வாடா மலரே வா... வா...
உதிர்காலம் எதுவென முதுமையே முடிவுரை எழுதும்


பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

விளக்கொன்று ஏற்றி வைத்தேன்....

நெற்றியின் நீறளவே கற்று கற்ற ஒளி ஏந்தி
விளக்கொன்று ஏற்றி வைத்தேன் இம் மாநிலத்தில்
சுடர் மிகை ஒளி பருகி உற்ற இருள் நீக்கி
கட்டவிழா கரம் கோர்த்து கண் மணிகள் வாழவே
ஒளி பெற்றவரே நாவடு செய்து எனை சுடினும்
அச்சம் என்பதறியேன் அனலிடை வேகினும்
சுட்ட சங்காய் ஒளிர்வேன் பிரபாகரனே


பாவலர் வல்வை சுயேன்

சனி, 30 செப்டம்பர், 2017

சிறுவர் உலகம்....

பட்டாம் பூச்சிகள் பறக்கிது பறக்கிது - சிட்டாய்
சிறகினை சிறிசுகள் விரிக்கிது விரிக்கிது
இது சிங்கார உலகம்தான்
சிறு மலர்களின் கொண்டாட்ட கலகம்தான்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டிதான் கூ.....

தப்புத் தன்டா செய்திடுவோம் தண்டணை இல்லேங்க
முத்தம் கொஞ்சம் கொடுத்திடுவோம் வெட்கமும் இல்லேங்க
கோயில் கட்டி விளையாடி கும்பிடுவோம் நாங்க
நீங்க விளையாடி வளர்ந்ததை போலே பொம்மைகள் நாங்க
கோபம் இல்லே குரோதம் இல்லே வஞ்சமே இல்லே
வாங்க நீங்க போகலாம் நம்ம வண்டியில் ஊர்கோலம்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டிங்க கூ....

பிள்ளைகளாய் இருந்திட வெண்டும் தொல்லை இல்லேங்க
பெரியவராய் வளர்ந்தவரே ஏன் சிரிக்க மறந்தீங்க
பள்ளி சென்று பாடம் படிப்போம்
கல்விப் பேறு அள்ளியே எடுப்போம்
கூட்சு வண்டியில் காத்திருக்கோம் ஒன்றாய் போவோமா
சின்னச் சிறகினை விரித்து வாழும் சிறாரின் உலகம்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டி ஏறுங்க நீங்க கூ....
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு சுக்கு சுக்கு சுக்கு

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஆயுத பூஜை வாழ்த்துகள்....

விழியிலே எம் தேவன் எழுதினான் வீர காவியம்
இனி அவன்போல் யார் தருவார் ஒளி பிரபாகரம்
ஒளி இழந்த விழிகள் ஊமையாய் துடிக்கின்றன
இது இதிகாசம் அல்ல ஈழ காவியம்
செய்யுள் விரித்து வரவிலக்கணம் தந்தான்
நேரில் வந்த ஆண்டவனே வேலுப்பிள்ளை பிரபாகரன்

பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 28 செப்டம்பர், 2017

சேதாரம் இல்லை தேனே...

விண் நிலா மண்ணிலே வந்ததே முன்னே விரும்பினேன் நிலவே
காலச் சுளற்சியில் கண்ணிலே தூசு கலங்கினேன் உயிரே
இடியும் மழையும் கொடியும் மின்னலும்
வரல்லாம் வந்ததே வானிலை அறிக்கை அன்பே
கலங்குமா நெஞ்சு கலங்கியே தெளிந்தது
வாழ்க்கை புயலில் அனுதினம் அள்ளினேன்
ஆதாரம் நூறே சேதாரம் இல்லை தேனே


பாவலர் வல்வை சுயேன் 

ஊடலும் கூடலும் உனக்காயிரம் !!!

உருகும் ஆதவன் உதயமாகிறான்
கண்ணா இது அவன் நாடகம்
கோகிலத்தின் கண்ணா கண்ணா
கோதை அறிவாள்
உன் மன்மத லீலையின் மன ஓவியம்
கூடலும் ஊடலும் உனக்காயிரம்
ஊடல் அறியான் ஆதவன்
அவனே உலகின் உயிர் ஊடகம்

பாவலர் வல்வை சுயேன் 

புதன், 27 செப்டம்பர், 2017

எரிகிறதே என்னுயிர் !!

உலகெலாம் உணர்ந்து உள்ளொளி பெருக்கி
அன்பால் அணைத்தேன் அணையவில்லை
உள்ளன்பை கொடுத்தேன் வாங்கவில்லை
தலைக்கு மேலே தாழ்மையின் வீழ்ச்சி
இதற்கு மேல் என் செய்வேன்
இனியும் வேண்டேன் இன்னுயிர்


பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

தீர்க்க சுமங்கலி பவ

உயர்வினை எண்ணி போ உரிமை இழந்த ஊனம் உண்டேல்
விண்ணுயர்ந்த நட்சத்திரங்களும் உதிர் சாம்பலாகி
ஒளி மயம் இழந்தே போகும்

பாவலர் வல்வை சுயேன்

புதன், 13 செப்டம்பர், 2017

நான்கு கண்கள் கொஞ்ச நேரம் !!!

அழகனென்பார் அழகி என்பார் இத்தனை நாள் எங்கிருந்தார்
ஊரும் இல்லை உறவும் இல்லை இன்றநெற்றில் இதயம் என்பார்
ஆம்பல் தூபம் அழகிய பேச்சு ஆடைகட்டிய நிலாவென ஆனந்த உலா
நான்கு கண்கள் கொஞ்சநேரம் கொஞ்சும் முலாம் கொஞ்சம் கொஞ்சம்
அஞ்சேலென அருள்கூர்ந்து அள்ளிடுவார் அந்தரங்கம்
தென்றலென தொடாதே வரும் திங்களெல்லாம் தீதே
வா,சாந்தியும் வசந்தியும் நுண்ணிய வைரஸ்சே
கவசம் இல்லா சுவாச மிகையாலே
விசுவாசம் இல்லா வைரஸ் உன்னுயிர் தின்னும்
தாம் தினக்க ததிக்கினத்தோம் தோம் தோம்
தடுப்பரன் இல்லையேல் தம்பி தங்கைகளே
சாந்தி முகூர்த்தம் பிணத்துக்கித்தான்

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நிலை கொள் மனமே...

நியம் தனை நிழல் கௌவிடும் நீரோட்ட மிகையினை யார் வெல்வார் நிலை கொள் மனமே தலை சாயும் வாழ்வும் தாழ்வும்

பாவலர் வல்வை சுயேன்

புதன், 30 ஆகஸ்ட், 2017

மனுசன் எனக்கு மசக்கையாச்சு !!!


நாலு முள கூந்தல்காறி தோகை மெல்ல விரித்தாளே
ஆசைத்தூறல் கூதல் தொட்டு ஆடும் மயில் அசந்தேனே
ஆறுகால பூசையிலே சாமியென்று சொன்னாளே
பாவியின்று பயித்தியமாய் சேலை நூலின் பின்னாலே

சினிமா என்றால் சினுங்குகிறாள்
சமையலென்றால் அனுங்குகிறாள்
புடவை கடை பொம்மை போலே
நகை கடையில் நுள்ளுறாளே
அட்டியலு ஒட்டியானம்,
வளையல் மோதிரம் வாங்கி கொடுத்தேன்
வைர நெக்கிலஸ் வாங்கிக் கொடென்டு
பூசை செய்து கொல்லுறாளே
மாதச் சம்பளம் மீதம் இல்லே
மனுசன் எனக்கு மசக்கையாச்சு

ஊத்தை வேட்டி சால்வையிலே
ஊரை சுற்றி வாறேனே
பயித்தியம் பயித்தியம் பயித்தியம்தான்
ஊரே சொல்லு தென்னை பயித்தியம்தான்
பணம் இல்லா பிணமாகி நிழலுக்கும் நிந்தனையானேன்
வாய்க்கரிசி தருவதற்கும் நெற்றிக் காசை வருடுறாளே
பாச நேச பந்த மெல்லாம் பணம்தானென்றால்
போதுமடா சாமி போகும் வளி எங்கே சொல்லு

பாவலர் வல்வை சுயேன்

புதன், 23 ஆகஸ்ட், 2017

தீயும் மனமே உள்ளொளி ஏற்று ....வேண்டுவது வேண்டா நிலையுற்று மாண்டால் வருமெனும் மறு ஜென்ம நினைவோதி தீயும் மனமே உள்ளொளி ஏற்றி உளமிசை மேவு பூமிக்கும் பாரமே உன் வாழ்வு

பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்