திங்கள், 21 டிசம்பர், 2015

நவீன ஹரிச்சந்திரன் ....மெய்யெனும் ஒற்றைச் சொல்லே உலகின் உயர் வேதம் என
பொய் உரைத்திடாமல் பொழுதை கழித்திருந்தேன்
இதை எடுத்துரைத்திட நான் கொண்ட கொள்கைக் கோலம்
மரணத்திலும் தீராத மன்னிப்பில்லா மாகா பாதகம் ... ....
மது மாது சூதென மோகம் கொண்டு
தீய துணை மஞ்சம் கிடந்து
புல்லாகி பூடாகி புழுவாகி போனவன் நான்
இல்லை என்று பொய் சொல்லவில்லை
மெய்யினை காத்தேன் ....
சொத்து சுகம் புறம் எரித்த விஷ யந்தெனக் கண்டு
சொந்த பந்தம் விலகி விட்டகன்றும்
முடி இல்லா மன்னவனாய் முள்ளிருக்கும் ரோயாவின்
தாழம் பூ வாசமே சுகந்தமாய் கிடந்தேன்...

வரவின்றி செலவு செய்து செலவுக்கும் பணம் இன்றி
செய்வ தறிந்தும் அறியா புலையன் ஆனேன் நான்
தீயினை சாட்சி வைத்து தாலிக்குள் தனை நிறுத்தி
தாரமாய் வந்தவளை ஏலத்தில் விற்ற பாவி நான்
அரசாளப் பிறந்தவனை அடிமை யென ஆக்கிவைத்து
கொடு நாகம் தீண்டி மாண்டு மயானம் வந்தவேளை
பிணக் கூலி கேட்டு உதைத்த உணர்வற்ற
சுடலையன் நான்.. ...
விதி எனச் சொல்லி வீண் வாதம் இனிச் செய்யேன்
ஹரிச்சந்திரன் எனும் நாமம் மெய்யுக்கு உவமானம்
நம்பிக்கைத் துரோகத்திற்கு நானே அவமானம்
பிடி சாம்பல் ஆகிவிட்டேன், இனி
முடி ஆண்டு ஏது செய்வேன்
ஈசனே இனி எங்கே உனை நான் காண்பேன் ...Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்